'துருவங்கள் 16' படத்திற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'மாஃபியா'. இதில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி பிரியா பவானி சங்கர். படம் விரைவில் திரை காண்கிறது.
இந்நிலையில், அருண் விஜய்யிடம் திறமை கொட்டிக் கிடப்பதாகப் பாராட்டுகிறார் கார்த்திக் நரேன்.
"இது எனது மூன்றாவது படைப்பு. காவல்துறை சம்பந்தப்பட்ட கதையைக் கையாண்டுள்ளோம். சென்னை மாநகரம்தான் கதைக் களம்," என்கிறார் கார்த்திக் நரேன்.
கதைப்படி, அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாம். பிரியா பவானி சங்கரும் போலிஸ் அதிகாரியாகவே திரையில் தோன்றுகிறார்.
"அருண் விஜய்யைப் பொறுத்தவரை, அவரால் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்தளவு திறமை இருக்கிறது. இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் இடையே நடக்கிற போர்தான் இந்தப் படத்தின் மையக்கதை.
"நடிகர் பிரசன்னாவின் கதாபாத்திரம் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. பிரியா பாவானி சங்கருக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தையே வழங்கியுள்ளோம். அவரை ஒட்டுமொத்த படக்குழுவும் அந்த வேடத்துக்கு சிபாரிசு செய்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்," என்கிறார் கார்த்திக் நரேன்.
அதிரடி சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளாராம் பிரியா. படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
படத்தின் ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ளனர். ஒரே ஒரு பாடல் மட்டும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.
"பிரசன்னாவைப் பொறுத்தவரை ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிக விரைவாக தன்னை மாற்றிக்கொள்வார். ஆர்ப்பாட்டமாகவும் வருவார், அடக்கி வாசிக்கவும் தெரியும்.
"இப்படத்தின் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புக்கும் நன்றி. மொத்தத்தில், இந்தப் படம் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறேன்," என்கிறார் கார்த்திக் நரேன்.
பட வேலைகள் மொத்தமாக முடிந்துவிட்டதாம். எனவே வெளியீட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருவதாகத் தகவல். மார்ச் இறுதிக்குள் 'மாஃபியா' வெளியீடு காணுமாம்.

