திருமணத்துக்குப் பிறகும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரு தரப்பிலும் அவருக்குத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, விரைவில் நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்துள்ளார் சமந்தா. அதற்கான காரணத்தையும் அண்மைய பேட்டியில் அவர் விவரித்துள்ளார்.
தமிழில் வெற்றி பெற்ற '96' படத்தை தெலுங்கில் 'ஜானு' என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்கின்றனர். தமிழில் திரிஷா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்.
விஜய் சேதுபதி தமிழில் நடித்த வேடத்தில் சர்வானந்த் நடிக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சமந்தா '96' படத்தில் திரிஷாவின் நடிப்பு தம்மை வெகுவாகக் கவர்ந்தது என்றார். மேலும், திரையுலகில் தம்மால் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"கடந்த பத்து ஆண்டுகளாக திரையுலகில் நீடித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. எனினும் இப்போது எனக்கென குடும்பம் இருக்கிறது. எனவே, திரையுலகப் பயணம் குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
"அதிகபட்சமாக மேலும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குத்தான் நடிக்க இயலும். அதன்பிறகு திரையுலகில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்," என்றார் சமந்தா.
எனினும் நடிப்பைக் கைவிட்டாலும் திரைத்துறையுடன் ஏதேனும் ஒருவகையில் தமது தொடர்பு நீடித்து வரும் என்று குறிப்பிட்ட அவர், பொதுவாகவே நடிகைகளுக்குச் சினிமா ஆயுள் என்பது குறைவுதான் என்றார்.
திரையுலகை விட்டு விலகும் நடிகைகளை ரசிகர்கள் உடனே மறந்துவிடுவார்கள் என்றும், இது தமக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எனவே, ரசிகர்கள் தம்மை என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் சில படங்களில் நடிக்க வேண்டும் எனத் தாம் விரும்பியதாகவும் சமந்தா தெரிவித்தார்.
"எனது இந்த ஆசை 'ஜானு' படம் மூலம் நிறைவேறி உள்ளது. நான் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது ஒவ்வொரு முறையும், 'இந்தப் படத்துக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும்?', 'ரசிகர்களுக்குப் பிடிக்குமா?' என்று அதிகம் யோசித்துப் பதற்றமடைவேன்.
"தொடக்கத்தில் நல்ல சம்பளத்தை எதிர்பார்த்து நடிக்கும் நடிகைகள் பின்னர் பணத்துக்காக நடிக்க மாட்டார்கள். தரம் தான் முக்கியம் என்பார்கள். நானும் அப்படித்தான்.
"தற்போது நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் தனித்துவம் வாய்ந்ததாக, சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன். அந்த வகையில் '96' படத்தில் விஜய் சேதுபதியை விட திரிஷாவின் நடிப்புதான் என்னை மிகவும் கவர்ந்தது.
"அதனால் அதன் தெலுங்கு மறுபதிப்பான 'ஜானு'வில் என்னை ஒப்பந்தம் செய்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்," என்றார் சமந்தா.
இந்த 'ஜானு' என்ற தலைப்பு படக்குழுவினருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்த சுவாரசிய தகவல் உள்ளது.
இதே தலைப்பில் 'பாகுபலி' பிரபாஸ் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த 'ஜானு' தயாரிப்பாளர் உடனடியாக பிரபாசை அணுகினாராம். '96' படம் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிவித்து, 'ஜானு' என்ற தலைப்பு இப்படத்துக்கு எவ்வளவு முக்கியமானது, பொருத்தமானது என்பதையும் விவரித்தாராம்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரபாஸ், கடைசியாக தலைப்பை விட்டுத்தர சம்மதித்துள்ளார்.
மேலும் சமந்தா சிறந்த நடிகை என்று பாராட்டிய பிரபாஸ், அவருக்கு இந்தத் தலைப்பை விட்டுக்கொடுப்பதாகவும் கூறியுள்ளாராம்.
இதையடுத்து பிரபாசை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தாராம் சமந்தா.
'ஜானு'வைக் காண தெலுங்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.

