பிக்பாஸ் மூலம் பிரபலமான யாஷிகாவை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதன்பிறகு 'ஜாம்பி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தற்போது ஆர்.ஜே. பாலாஜியின் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
கடந்தாண்டு ஆர்ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதி, நடித்த 'எல்கேஜி' பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து அடுத்த படத்திற்கும் பொறுப்பேற்குமாறு அவருக்கு வாய்ப்பளித்தது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம்.
இதையடுத்து 'மூக்குத்தி அம்மன்' என்ற தலைப்பில் தானே கதை எழுதி, இயக்குகிறார் பாலாஜி. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்க, இயக்குநர் பொறுப்பை பாலாஜியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் என்.ஜே. சரவணன்.
எதற்காக நீட்டி முழக்க வேண்டும்? இதுதான் விஷயம். இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்தையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
முழுக்கதையும் நயன்தாராவை வட்டமிடும் என்றால், முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்தும் பகுதியில் யாஷிகா இடம்பெறுவாராம்.
"கடந்தாண்டு எனக்குச் சொல்லிக்கொள்ளும் வகையில் அமைந்தது. 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தேன்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சி என்னை ரசிகர்களிடம் நன்கு அறிமுகப்படுத்தியது என்றால், இந்த இரு படங்களும் ரசிகர்கள் என்னை தொடர்ந்து நினைவில் வைத்துக்கொள்ள உதவின.
"ஆர்ஜே. பாலாஜி எப்படிப்பட்ட சுவாரசியமான மனிதர் என்பது அனைவருக்கும் தெரியும். 'மூக்குத்தி அம்மன்' கதையை அவர் சொல்வதற்கு முன்பே நான் ஒப்புக் கொண்டேன்.
காரணம், எனக்கு அவர் மீதுள்ள நம்பிக்கை. அது வீணாகாதபடி அருமையான படத்தை உருவாக்கி வருகிறார்," என்று பாராட்டுகிறார் யாஷிகா.
கடந்தாண்டு நிகழ்ந்த விபத்துச் சம்பவத்தை அறவே மறக்க விரும்புவதாகச் சொல்பவர், ஒருசிலர் அந்தச் சம்பவத்தை வைத்துத் தனது நல்ல நற்பெயரைச் சிதைக்க முயற்சித்ததாக சாடுகிறார்.
"இனி ஒவ்வொரு நகர்வையும் மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இந்தச் சம்பவம் கற்றுக் கொடுத்தது. இப்போது அப்படித் தான் இருக்கிறேன். நண்பர்கள் பக்கபலமாக உள்ளனர்," என்று சொல்லும் யாஷிகா, தற்போது நடிக்கும் ஆர்ஜே பாலாஜியின் படத்தை முடித்த கையோடு, மேலும் ஒரு தமிழ் படத்திலும், மலையாளத்திலும் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.
* தனுஷ் நடிக்கும் புதுப்படத்தில் நித்யாமேனன் ஒப்பந்தமாகி உள்ளார். இது தனுஷின் 44ஆவது படம். சன் பிக்சர்ஸ் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்குகிறார். இப்படத்துக்கான கதை, திரைக்கதையை தனுஷ்தான் எழுதுகிறாராம். கூடவே கார்த்திக் நரேனின் பங்களிப்பும் இருக்கும் என்பது உபரித் தகவல்.
"அண்மையில் வெளியான 'சைக்கோ' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, உற்சாகமாக உணர்கிறேன். தமிழ் ரசிகர்களின் ரசனை உணர்வும், திறமையை மெச்சும் விதமும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தனுஷுடன் நடிப்பது எப்போதுமே ஒரு வகையில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருக்கும் எனப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கும் கிடைக்க உள்ளது. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்புகிறேன். கால்ஷீட் பிரச்சினைகளையும் மீறி தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்," என்கிறார் நித்யாமேனன்.
* திடீரென தமிழ்ப் படங்களில் தலைகாட்டுவதுதான் பூஜா குமாரின் வழக்கம். அதிலும் கமல் படங்களில் சிறு வேடம் கிடைத்தாலும் அதில் தலை காட்டிவிடுகிறார்.
இந்நிலையில் சிபிராஜுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த 'கபடதாரி' படத்திலிருந்து விலகி விட்டாராம். அதற்கான காரணம் தெரியவில்லை. கன்னடத்தில் வெளியான 'காவலுதாரி'யை தமிழில் மறுபதிப்பு செய்கிறார்கள். இதில்தான் பூஜாகுமார் ஒப்பந்தமாகி இருந்தார். திடீரென்று தாம் விலகுவதாக தெரிவிக்கவே, அவருக்குப் பதிலாக அந்த முக்கிய கதாபாத்திரத்தில் சுமா ரங்கநாதனை ஒப்பந்தம் செய்துள்ளனர். சுமாவை மறந்துவிட்டவர்களுக்காக சிறு குறிப்பு. பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நாயகனாக நடித்த 'மாநகரக் காவல்' படத்தில் நடித்தவர் சுமா. அதன்பிறகு அர்ஜுனுடன் 'மேட்டுப்பட்டி', அஜீத்துடன் 'ஆரம்பம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
* நடிகை ரகுல் பிரீத் சிங் திடீரென இரண்டு இந்திப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

