பரத் திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகளாகி விட்டன. பெரிய வெற்றி, படுதோல்வி என்று சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்துவிட்டார்.
இந்நிலையில் அண்மையில் வெளியான 'காளிதாஸ்', பரத் பற்றி ரசிகர்களை, திரையுலகத்தினரை மீண்டும் பேச வைத்திருக்கிறது. இந்நிலையில் இடைவிடாத உடற்பயிற்சியும் கட்டுப்பாடான உணவுப் பழக்கமும்தான் தனது வெற்றிக்குக் காரணங்கள் என்கிறார் நடிகர் பரத்.
"தோல்விகளில் இருந்து மீண்டு வந்ததாக உங்களைப் பற்றி ஊடகங்களில் குறிப்பிடுகிறார்கள். அதுகுறித்து?"
"தோல்வி அடைந்தோம் என்று ஒப்புக்கொள்வதில் எந்தவிதத் தயக்கமும் தேவையில்லை. வெற்றி தோல்வி என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஓர் அங்கம்தான்.
"நான் நடிக்கும் அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் எனும் பேராசை எனக்கு உண்டு. வெற்றிக்காகவே அனைவரும் கடுமையாக உழைக்கிறோம்.
"சில சமயங்களில் நாம் நடிக்கும் படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் வெற்றி பெறும். சில படங்கள் நாம் எதிர்பார்க்கும் சமயத்தில் வெளியீடு காணாமல் ஏமாற்றம் தரும்.
"இதற்கெல்லாம் நம் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்ட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில் ஒரு நடிகரின் வாழ்க்கையில் திடீர் தொய்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது, தடுக்கவும் இயலாது.
"நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு படம் வெளியாகும்போது உரிய கவனிப்பு பெறாமல் போகும். அந்தப் படத்துக்காக நாம் செலுத்திய உழைப்பு, முயற்சி பேசப்படாமல் போகலாம்," என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் பரத்.
தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட சறுக்கல்களைத் தாம் அவ்வப்போது எதிர்கொண்டதாகச் சொல்பவர், ஒரு படத்தின் தோல்விக்கு, தாம் எந்த வகையிலும் காரணமாக இல்லாதபோதிலும், அத்தோல்விக்கான சுமைகள் முழுவதும் தன் தோள் மீது விழுந்ததாகக் குறிப்பிடுகிறார்.
ஆனால், இத்தகைய வருத்தங்களிலிருந்து 'காளிதாஸ்' தம்மை மீட்டெடுத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். இந்த உற்சாகத்துடன் மேலும் பல ஆண்டுகள் திரையுலகில் தம்மால் தெம்புடன் வலம் வரமுடியும் என்றும் சொல்கிறார்.
"உடற்பயிற்சிதான் வெற்றியின் ரகசியம் என்கிறீர்கள். எப்படி?"
"'பாய்ஸ்' படத்தில் நடித்தபோது எனக்கு 16 வயது. அப்போது உடற்பயிற்சியின் அருமை குறித்து ஒன்றும் தெரியாது. ஒல்லியாகத்தான் இருப்பேன். இயக்குநர்கள் சொன்னதைச் செய்வேன். ஆனால், 'நேபாளி'யில் நடிக்க ஒப்பந்தமானபோதுதான் உடற்பயிற்சி, உடற்கட்டின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்டேன்.
"உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போகத் தொடங்கியது அப்போதுதான். அதன் பிறகு ஒருநாள் கூட உடற்பயிற்சி செய்யத் தவறியதில்லை. நடிகனுக்கு மிக முக்கியமானது உடல் ஆரோக்கியம்தான்.
"படத்துக்குப் படம், கதைக்கு ஏற்ப ஒரு நடிகனால் தன் உடற்கட்டை மாற்றிக்கொள்வதற்கு உரிய திறமை வேண்டும். அப்போதுதான் நமக்கு ஏற்ற கதைகள் தேடிவரும். தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் 'காளிதாஸ்' பட வாய்ப்பு என்னைத் தேடி வந்திருக்குமா?," என்று கேட்கிறார் பரத்.
பட வாய்ப்புகள் இல்லாதபோதும் தாம் உடற்பயிற்சி செய்யத் தவறியதில்லை என்று குறிப்பிடுபவர், தற்போது அந்தப் பழக்கம்தான் திரையுலகில் தாம் மீண்டும் ஒரு வெற்றி வலத்தைத் தொடங்கக் காரணமாக அமைந்துள்ளது என்கிறார்.
தற்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகிறாராம் பரத். மேலும் தமிழ்ப் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார். தவிர சில இயக்குநர்களிடம் கதை கேட்டும் வருகிறாராம்.

