மெஹ்ரின்: தமிழ் கற்றுக்கொள்ள ஆசை

3 mins read
355be682-5233-4bb0-ac1c-a06422f0b0e9
விரைவில் தமிழ் மொழியைக் கற்று, வசனங்களைப் புரிந்துகொண்டு பேசி நடிக்கும் காலம் வெகுதூரம் இல்லை என்கிறார் மெஹ்ரின். -

தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரும், அவர்களது மனதில் நிரந்தரமான ஓர் இடமும் கிடைத்தால் அதுவே போதும் என்கிறார் இளம் நாயகி மெஹ்ரின் பிர்சாதா.

'பட்டாஸ்' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி உள்ளார் இந்த இளம் நாயகி. இதையடுத்து புதுப்பட வாய்ப்புகள் பலவும் தேடி வருகின்றனவாம். அந்த உற்சாகத்தில் சற்றே அதிகம் சாப்பிட்டு உடல் பெருத்துவிட்டது என்று சொல்லிச் சிரிக்கிறார். இதனால் கடந்த சில தினங்களாக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.

"எந்தவொரு நடிகையும் தனது முதல் படம் வெற்றி பெற வேண்டும் என்று தான் விரும்புவார். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. எனினும் என் எதிர்பார்ப்புக்கும் ஆசைக்கும் மாறாக எனது நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் சரியாகப் போகவில்லை.

"எனவே பட்டாஸ் போன்ற பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. எனினும் எனது அதிர்ஷ்டம் தனுஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் மூலம் தமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட மறுபிரவேசம் செய்துள்ளேன்.

"எந்த நேரத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியம். அதை விட சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்க வேண்டும்," என்கிறார் மெஹ்ரின்.

பட்டாஸ் கதையைக் கேட்டதுமே அதில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டதாம். மேலும் இந்தப் படம் கோடம்பாக்கத்தில் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் உண்டானதாம்.

"என்னதான் கதை பிடித்திருந்தாலும், இயக்குநர் துரையிடம் எனது கதாபாத்திரம் குறித்து விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அது மட்டுமல்ல, நிறைய கேள்விகளையும் எழுப்பினேன். அவர் சிறு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல் எனக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்தார்.

"இன்று திரையில் என் நடிப்பைப் பார்த்துப் பலரும் பாராட்டுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இயக்குநர் துரையும் தனுஷும் தான். நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவ்வளவு எளிதாக நடித்துவிட முடியாது. கொஞ்சம் அசந்தாலும் நம்மைப் பார்த்துச் சிரிக்க வேண்டிய, ரசிக்க வேண்டிய ரசிகர்கள் எரிச்சலடைந்து விடுவார்கள்.

"நான் குறிப்பிடும் இந்தச் சிரிப்புக்கும், எரிச்சலுக்கும் இடையே மெல்லிய கோடு தான் உள்ளது. எனவே மிகுந்த கவனத்துடன் நடிக்க வேண்டியிருந்தது," என்கிறார் மெஹ்ரின்.

தமிழில் பேசக் கற்றுக்கொண்டால் நடிப்பது எளிதாக இருக்குமே என்று கேட்டால், ஆமோதித்து ஏற்றுக்கொள்கிறார்.

அறிமுகமான வேகத்தில் தொடர்ந்து தமிழில் நடித்திருந்தால், தமிழ் மொழியும் தன்வசமாகி இருக்கும் என்று குறிப்பிடுபவர், இடையில் தெலுங்கில் கவனம் செலுத்தியதால் தமிழைக் கற்க முடியவில்லை என்கிறார்.

"எனக்கும் தமிழ் மொழியைத் தெரிந்துகொண்டு நடிக்க வேண்டும் எனும் ஆசை உள்ளது. ஆனால் சூழ்நிலை சாதகமாக அமையவில்லை. தெலுங்கிலும்கூட தொடக்கத்தில் அம்மொழி புரிபடவில்லை. ஆனால் நாட்களின் போக்கில் எனது கதாபாத்திரத்திற்கு நானே பின்னணிக் குரல் கொடுக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளேன்.

"தமிழிலும் இதே போன்று வளர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது எனக்கென ஒரு குழு நியமிக்கப்பட்டு தமிழ் வசனங்களுக்கான அர்த்தத்தை விளக்குவது, சரியாக வார்த்தைகளை உச்சரிப்பது, வசனங்களுக்கு ஏற்ப முகபாவங்களை வெளிப்படுத்துவது உள்ளிட்டவை நடந்து வருகின்றன. மிக விரைவில் இந்நிலை மாறும்," என்கிறார் மெஹ்ரின்.

தனுஷ் போன்ற பெரிய நடிகர்கள் எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுவது ஆச்சரியம் அளித்ததாம். பட்டாஸ் படப்பிடிப்பில் இவரது தவறால் சில காட்சிகளை பலமுறை படமாக்க வேண்டியிருந்ததாம். அப்போதெல்லாம் தனுஷ் கொஞ்சம் கூட அலுத்துக் கொள்ளவில்லை என்கிறார்.