‘நாயகன், வில்லன் எந்த நடிப்புக்கும் நான் தயார்’

நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லன் வேடத்தை ஏற்பதற்கு தனி தைரியம் வேண்டும். விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை இந்த தைரியத்தின் அளவு விண்ணைத் தொடும்போல் இருக்கிறது. 

தற்போது தமிழின் உச்ச நாயகர்களில் ஒருவரான விஜய்யுடன் வில்லனாக மோதிக் கொண்டிருக்கிறார். ‘மாஸ்டர்’ படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள நிலையில் கதாநாயகன், வில்லன், சிறப்புத் தோற்றம் என்று சேதுபதி நடிக்கும் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. 

ஒவ்வொரு கதாநாயகனையும் ஏதேனும் ஒரு வட்டத்துக்குள் அடக்கிவிட முடியும். ரஜினி அதிரடி கதாபாத்திரங்களை ஏற்று நகைச்சுவைக்கும் சற்று முக்கியத்துவம் கொடுப்பார். கமல் சவாலான பாத்திரங்கள், கதைக்களத்தை விரும்புவார். 

விஜய்க்கு ஜனரஞ்சகமான கதைகள்தான் பிடிக்கும். அஜித் கிட்டத்தட்ட விஜய் பாணி என்றாலும், அவ்வப்போது புது முயற்சிகளிலும் ஈடுபடத் தயங்கமாட்டார். 

ஆனால் சேதுபதி இவர்களில் இருந்து வித்தியாசமானவர். இவரை எந்த வட்டத்துக்குள்ளும் சுருக்கிவிட முடியாது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள். 

“தொடக்க காலத்தில் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பிடிக்க அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் நமக்குத் தெரியும். படிப்படியாக வளர்ந்து இப்போது சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் சிறப்புத் தோற்றம் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு படத்தின் வியாபாரத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள்,” என்று அந்த விவரப் புள்ளிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தற்போது அவர் ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கும் ‘கடைசி விவசாயி’, வெங்கட் கிருஷ்ணா ரோகந்த் இயக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’, டெல்லி பிரசாத் இயக்கும் ‘துக்ளக் தர்பார்’, விருமாண்டி இயக்கும் ‘க.பெ.ரணசிங்கம்’, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம், இந்தி, தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஜனநாதன் இயக்கத்தில் நடித்துவரும் ‘லாபம்’ படம் குறித்துதான் அண்மைக்காலமாக அதிகம் பேசுகிறார் சேதுபதி. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் மே மாத இறுதிக்குள் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். 

‘காக்கா முட்டை’ மணிகண்டனின் அடுத்த படமான ‘கடைசி விவசாயி’ படத்தில் முருகபக்தராக நடித்துள்ளார் சேதுபதி. இதில் நல்லாண்டி என்பவர் இவருக்கு இணையான பாத்திரத்தில் நடித்துள்ளாராம். படம் எப்போது வேண்டுமானாலும் வெளியாகக்கூடும். 

சேதுபதியும் மணிகண்டனும் நீண்ட நாள் நண்பர்கள். இவர்கள் இருவருக்கும் தெரிந்த நண்பர்கள் அண்மையில் இப்படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டினராம். 

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் இசைக்கலைஞராக நடித்துள்ளார் சேதுபதி. இதில் அவருக்கு ஜோடி மேகா ஆகாஷ். முதல்முறையாக சேதுபதியுடன் கூட்டணி அமைத்துள்ளார் விவேக். 

‘மாஸ்டர்’ படத்தை முடித்த கையோடு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ’துக்ளக் தர்பார்’ ஆகிய இரு படங்களிலும் ஒருசேர நடிக்க உள்ளார் சேதுபதி. இதற்கிடையே தெலுங்குப் படம் ஒன்றில் நாயகிக்குத் தந்தையாகவும் வில்லனாகவும் நடிக்கிறாராம். மேலும் அல்லு அர்ஜுனின் படத்தில் அவருக்கு சேதுபதிதான் வில்லன். 

இதற்கிடையே நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘க.பெ. ரணசிங்கம்’ படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் ரணசிங்கம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சேதுபதி. படத்தில் இவருக்கான பகுதி மிகவும் குறைவுதானாம். மேலும் இந்தி நடிகர் அமீர்கானின் புதுப்படத்தில் அவரது நண்பராக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியிருப்பதாக தகவல்.