சுடச் சுடச் செய்திகள்

‘உழைப்புக்கு கிடைத்த இடம்’

கலைக் குடும்பத்தின் வாரிசு என்பதால் தமக்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைத்ததாகக் கூறப்படுவதை அறவே மறுப்பதாகச் சொல்கிறார் விக்ரம்  பிரபு. 

இதுவரை தாம் எதிர்கொண்டுள்ள ஏற்றங்கள், இறக்கங்கள் அனைத்துமே தமது உழைப்பாலும் யதார்த்தமாகவும் நடந்த விஷயங்கள் என்றும் ஆணித்தரமாகச் சொல்கிறார். மேலும் வாரிசு என்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும் என்பதையும் தம்மால் ஏற்கமுடியாது என்கிறார்.

“அப்பாவும் தாத்தாவும் யாரென்று சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர்கள் எந்தளவுக்குப் பிரபலமாக இருந்தார்கள் என்பது மொத்த உலகத்துக்கும் தெரியும். ஆனால், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான், சினிமாத் துறை குறித்து எந்தவித புரிதலும் இல்லாமல் வளர்ந்தேன் என்பதுதான் உண்மை. நடிப்பைக் கற்றுக்கொண்டு மேடைகளில் நடித்து பயிற்சி பெற்ற பிறகே சினிமாவுக்கு வந்தேன். 

“இப்போது நான் நின்று கொண்டிருக்கும் இடம் நானாக மேற்கொண்ட பயணத்தின் விளைவாக அடைந்துள்ள இடம். இதற்காக நான் எந்தளவு போராடினேன் என்பது எனக்குத்தான் தெரியும்,” என்று சொல்லும் விக்ரம் பிரபு கலைக்குடும்பத்தின் வாரிசு என்ற வகையில் தனக்குச்  சில சுமைகள் இருப்பதாகச் சொல்கிறார். 

தந்தை, தாத்தா சம்பாதித்து வைத்துள்ள நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில்  மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

“இருவருமே தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி இடங்களைப் பெற்றுள்ளனர். எனவே, மனம் போன போக்கில் நான் கதைகளைத் தேர்வு செய்து நடித்துவிட முடியாது. என்னுடைய எந்த ஒரு சிறு அசைவும் இவர்களுடைய மரியாதையைக் குலைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். 

“அதனால்தான் நான் நடிக்கும்  கதைகளைத் தேர்வு செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன். பொதுவாகவே நல்ல விஷயங்கள் நடக்க சற்று நேரம் பிடிக்கும் என்பது உண்மைதானே.”

எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

“அப்பாவும் தாத்தாவும் தேர்வு செய்து நடித்த படங்களைப் போல் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஒரு படம் வெளியான பிறகு அது விக்ரம் பிரபு படமாகப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது ஒரு கூட்டு முயற்சி. கதையை ஒருவர் உருவாக்குகிறார். ஒருவர் அதைத் தயாரிக்கிறார். 

“எனவே ஒரு படம் படமாக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும்? என்பது என் கையில் இல்லை. அதேபோல் அந்தப் படம் எப்போது வெளியாகும் என்பதையும் கூட நான் தீர்மானிக்க இயலாது. அதைத் தயாரிப்பாளர்தான் தீர்மானிப்பார். ஆனால், வெளியான பிறகு அதை விக்ரம் பிரபு என்கிறார்கள். ஆனால் அதில் பலரது உழைப்பு, கடின முயற்சி சம்பந்தப்பட்டுள்ளது. அதை மனதில் வைத்துக்கொண்டுதான் கதைகளையும் படங்களையும் தேர்வு செய்கிறேன். 

“அதேபோல் ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்பதும் நம் கையில் இல்லை. உதாரணமாக ‘கும்கி’ படத்துக்காக இரண்டாண்டுகள் கடுமையாக உழைத்தேன். படத்தின் சிறப்புக் காட்சிக்குப் பலர் வந்திருந்தனர். அந்தப் படத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ள அனைவருமே படம் வெற்றி பெறாது என்பதை என்னிடம் வெளிப்படையாகக் கூறினர். 

“ஆனால், படம் வெற்றி பெற்றதும், எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க போட்டி போட்டனர். அப்போதுதான் இது எப்படிப்பட்ட உலகம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது,” என்று சொல்லும் விக்ரம் பிரபு, தாம் எப்போதுமே இயக்குநரின், தயாரிப்பாளரின் நடிகன் என்று பெயரெடுப்பதையே விரும்புகிறாராம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon