காதலை உறுதி செய்த விக்னேஷ், நயன்

1 mins read
acc73d55-b795-4e16-afbf-2c0b0b67833c
அண்மைய புகைப்படம் ஒன்றில் விக்னேஷ் சிவன், நயன்தாரா. படம்: ஊடகம் -

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிப்பது ஊரறிந்த ரகசியம்.

இருவரும் ஜோடியாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கோவில் தரிசனம் செய்வது என்று எப்போதும் ஒன்றாகக் காணப்படுகிறார்கள்.

முக்கிய நிகழ்வுகளையும் தனிப்பட்ட சில நிகழ்வுகளையும் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் இவர்கள் மறப்பதில்லை.

இந்நிலையில், தாம் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற தலைப்பில் உருவாகும் அப்படத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் சமந்தாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தானும் நயன்தாராவும் இணைந்திருக்கும் சில படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இதற்கான பதிவில், 'எனது அழகான கதைக்கு இப்போது ஐந்து வயது... நிபந்தனையற்ற உன் அன்பினால் ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்' என்று குறிப்பிட்டு, நயன்தாராவின் பெயரையும் சேர்த்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இதுவரை தாங்கள் காதலிப்பதாக இருவரும் வெளிப்படையாக அறிவித்ததில்லை. இந்நிலையில் காதலர் தினத்தன்று, நயன்தாராவின் பெயரைக் குறிப்பிட்டு காதலை வெளிப்படுத்தி உள்ளார் விக்னேஷ் சிவன். அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.