சந்தானம் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பிரச்சினைகள் முளைத்து வருவது வழக்கமாகி உள்ளது.
அந்த வகையில் 'சர்வர் சுந்தரம்' படமும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது இப்படம். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டதாம். ஆனால், படத்தை வெளியிடுவதில் சில சிக்கல்கள் முளைத்தன. தயாரிப்பாளர் பணப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டதால் பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது.
"மிகக் கடுமையாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம். படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தையும் திட்டமிட்டு முடித்தோம்.
"சரியாகச் சொல்வதானால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள்ளாகவே படம் வெளியீடு காண தயாராகி விட்டது. அதன்பிறகு ஏற்பட்ட தாமதத்துக்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல," என்று வருத்தப்படுகிறார் இயக்குநர் பால்கி.
இந்தாண்டு ஜனவரி 31, பின்னர் பிப்ரவரி 14ஆம் தேதிகளில் 'சர்வர் சுந்தரம்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் முளைத்த சிக்கலால் இந்த அறிவிப்புகள் பொய்த்துப் போயின.
இந்நிலையில் வரும் 21ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளியீட்டு தேதியை அடிக்கடி மாற்றியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் பால்கி.
"அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன என்று உறுதியாக நம்பித்தான் சந்தானத்தையும் மற்ற கலைஞர்களையும் பட வெளியீட்டுக்கான விளம்பரத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டோம். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
"மற்றவர்கள் செய்த தவறுகளுக்காக நாங்கள் சிரமத்தை அனுபவிக்கிறோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம்," என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பால்கி.

