ரம்யா: மனநிறைவு உள்ளது

பிரச்சினைகள் குறித்துப் பேசினால் மட்டும் போதாது, அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிக்க வேண்டியது அவசியம் என்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். 

இவர் ஒரு குறும்படத்தை இயக்குகிறார் என்பது தெரிந்த செய்திதான். ஏதோ பொழுதுபோக்குக்காக ஒரு படைப்பை உருவாக்காமல் சமுதாய நலனையும் மனதிற்கொண்டு அந்தக் குறும்படத்தை உருவாக்கி இருப்பதாக சொல்கிறார். 

‘த ஹைட் (அன்) லர்ன்’ (‘The Hide (UN) Learn’) என்ற தலைப்பிலான அந்தக் குறும்படத்தை இயக்கி இருப்பதுடன், தன் அழகு குரலிலேயே அதன் உள்ளடக்கத்தை விவரித்து அனைவரும் பார்க்கக்கூடிய படமாக உருவாக்கி உள்ளாராம்.

“மேலும் வெறும் தொழில்நுட்பக் கலைஞராக மட்டும் எனது பங்களிப்பை நிறுத்திக்கொள்ளாமல் ஸ்ரீதா சிவதாஸ் உடன் இணைந்து நடிக்கவும் செய்திருக்கிறேன். பத்ரி வெங்கடேஷ் வசனங்களை எழுதியுள்ளார். 

“எனது இந்தக் குறும்படம் தமிழில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதும், இதற்காகத் தொடங்கப்பட்ட யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என்பதும் எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள். 

“இந்தப் படம் பெரும்பாலான குறும்படங்களைப் போல் பிரச்சினைகளை மட்டும் அடையாளம் காட்டாது. கூடுதலாக அவற்றைப் பற்றி நன்கு விவாதித்து சில தீர்வுகளையும் முன்வைப்பதாக இருக்கும். 

“மேலும் பாடல்கள், நடனம் மற்றும் கலை வடிவங்கள் பலவற்றையும் முயற்சி செய்யும் ஒன்றாகவும் இருக்கும்,” என்கிறார் ரம்யா நம்பீசன்.  

தனது இந்தப் புதிய பயணத்துக்காக ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ (Ramya Nambeesan Encore) என்ற பெயரில் இணையம் வழி தொடங்கியிருக்கும் தமது இந்தப் பயணம் மிகுந்த மனநிறைவையும் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார். அண்மையில் வெளியிடப்பட்ட ரம்யாவின் குறும்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அவர் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

இன்றைய சமூகத்தில் பெண்களின் வாழ்வு எப்படிப்பட்டதாக உள்ளது என்பதைப் பற்றி இந்தக் குறும்படம் விரிவாகப் பேசுவதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம்.

“இந்தப் புதிய பயணம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமைந்துள்ளது. உலகில் உள்ள அனைவருடனும் எனது அன்பையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள எனக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு இது. எனது பார்வையை எனது உலகத்தை, புதுப்புது எண்ணங்களை புதுமையான விஷயங்களை முயற்சி செய்து பார்க்க எனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரும் சுதந்திரம் இது. அந்த வகையில் எனது சமூக கடமையை நிறைவேற்றுவதாகக் கருதுகிறேன்.

“இயக்குநராக எனது முதல் முயற்சி  நவநாகரிக உலகில்  பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, குறிப்பாக இந்திய சமூகத்தில் அவர்களின் இன்றைய நிலை குறித்துப் பேசும் இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்கிறார் ரம்யா நம்பீசன்.

இந்தக் குறும்படத்துக்கு நீல் சுன்னா ஒளிப்பதிவு செய்ய, ரம்யாவின் சகோதரர் ராகுல் சுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். விரைவில் தமது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவாராம் ரம்யா.

“ஒரே மாதிரியான பிரச்சினைகளை மட்டுமே அலசுவது எனது நோக்கமல்ல. சமூகத்தில் நிலவும் பல்வேறு அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் வகையிலும் எனது படைப்புகள் இருக்கும்,” என்கிறார் ரம்யா.

இதற்கிடையே, இந்தப் புதிய முயற்சியின் காரணமாக, தமது திரைப்பயணத்தில் எந்தவித தொய்வும் ஏற்படாது என்றும், வழக்கம் போல் திரைப் பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் குறிப்பிடும் ரம்யா, மக்கள் நலம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது மனதளவில் பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகச் சொல்கிறார்.