‘இது சவாலான அனுபவம்’

தனது காதல் முறிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை சனாகான். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மூன்று தினங்களுக்கு முன்பே காதல் விவகாரம் குறித்து அவர் வெளிப்படையாக அறிவித்ததோடு விஷயம் முடிந்துவிடவில்லை.

சனாவுக்கும் அவரது காதலருக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் மோதல் துவங்கியுள்ளது. சனாகான் யார் என்று இளம் ரசிகர்கள் சிலர் கேட்கலாம். ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர், அதன்பிறகு ‘பயணம்’, ‘ஈ’, ‘ஆயிரம் விளக்கு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து தெலுங்கிலும் இந்தியிலும் கவனம் செலுத்தியவர், பிறகு கோடம்பாக்கம் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இந்நிலையில் பாலிவுட் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரைக் காதலித்து வந்தார் சனா. கடந்த ஓராண்டு காலமாக இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இந்நிலையில் காதலரைப் பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார் சனாகான்.

இவர்களது காதல் வாழ்க்கையில் ஒரு பெண் புகுந்ததால்தான் பிரச்சினை வெடித்ததாகத் தகவல். இந்நிலையில் காதல் முறிவு குறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சனாகான், இப்போதுதான் வெளிப்படையாகப் பேச தமக்கு தைரியம் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். “எங்களது காதல் மீது பலர் நம்பிக்கை வைத்திருந்தனர். அதன்மீது சிலருக்கு மரியாதையும் இருந்தது. எதிர்பாராதவிதமாக யாரிடம் இருந்து அன்பைப் பெற்றேனோ அவரிடமிருந்து தற்போது அது கிடைக்கவில்லை.

இந்த உண்மை தெரிவதற்கு எனக்கு ஓராண்டு காலமானது,” என்று சனாகான் தெரிவித்துள்ளார். தனது காதலர் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்ததே இத்தகைய ஏமாற்றம் ஏற்பட காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போது நன்கு யோசித்து தீர்க்கமான முடிவை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். தனது காதலரை ஏமாற்றுக்காரர் என்று சாடியுள்ள அவர், பல பெண்களைத் தன் காதலர் ஏமாற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“என்னைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று என் காதலர் கூறினார். ஆனால் அப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர் என்ன கற்றுத்தருவார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். “எங்கள் உறவைப் பிரிப்பதில் ஒரு பெண் தீவிரம் காட்டினார்.

அவரைப் பற்றி நினைத்தாலே அவமானமாக உள்ளது,” என்று சனாகான் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார். தன் காதல் வாழ்க்கையில் குறுக்கிட்ட பெண் யார் என்பது குறித்து விரைவில் தகவல்களை வெளியிடப் போவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் மூலம் மற்றவர்களாவது அந்த பெண்ணின் குணத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

“கடந்த செப்டம்பர் மாதமே மெல்வின் போக்கில் சில மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. தொடக்கத்தில் அதுகுறித்து நானும் அலட்டிக் கொள்ளவில்லை. எனினும் ஒருநாள் எதேச்சையாக அவரது கைபேசியை எடுத்தேன். அதைப் பார்த்ததும் ஓடி வந்து அதை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டார். “பிறகு உடனடியாக அதில் உள்ள குறுந்தகவல்களை வேகமாக அழித்தார். ஏன் இப்படிச் செய்கிறார் என்று முதல்முறையாக என் மனதில் சந்தேகம் எழுந்தது. அதன்பிறகு அவரைப் பற்றி மற்றவர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என்பதை படிப்படியாக உணர்ந்தேன். “அவர் வேறு ஒருவருடன் நெருக்கமாகிவிட்டார் என்பது எனக்குத் தெரியவந்தது. அந்தப் புதிய உறவு குறித்துப் பேச விரும்பவில்லை. அவர் யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டாம் என நினைக்கிறேன்,” என்கிறார் சனாகான். இனி திரைப்படங்கள், விளம்பரங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாகவும் சொல்கிறார் சனாகான்.