‘நண்பர்களை தந்த படம்’

‘மாஃபியா’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பட நாயகன் அருண்விஜய், நாயகி பிரியா பவானி சங்கர், பிரசன்னா உள்ளிட பலர் இப்படம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

பிரியா பவானி சங்கர் பேசுகையில் ‘மாஃபியா’ படம் திரையுலகில் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்றார். இந்தப் படத்தில் தாம் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்காகத் தம்மை தேர்வு செய்ததற்கு இயக்குநருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். அருண் விஜய், பிரசன்னா ஆகிய இருவருமே அற்புதமான நடிகர்கள் என்று குறிப்பிட்ட அவர், இயக்குநர் கார்த்திக் நரேன் எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர் என்றார். 

“இது எனக்கு மிகவும்  முக்கியமான, சிறப்பு வாய்ந்த படம். திரையுலக வாழ்க்கையை மீறி எனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நிறைய நல்ல நண்பர்களைக் கொண்டு வந்த படம். 

“அருண் விஜய், பிரசன்னா, இருவரையும் பார்த்து வியந்து போனேன். யார் நாயகன், யார் வில்லன் என்பதையெல்லாம்  குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை. 

“இந்தப் படத்தில் பிரசன்னாவுடன் எனக்குக் காட்சிகளே இல்லை. ஆனால் படப்பிடிப்புக்கு முன்பு அவருடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். தனக்கு என்னவேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் கார்த்திக் நரேன். இப்படித்தான் காட்சிகளின் நகர்வுகள் இருக்கவேண்டும் என்பதை அவர் முன்பே திட்டமிட்டு விட்டார். அதனால் தேவையில்லாமல் ஒரு காட்சியைக் கூட கூடுதலாகப் படமாக்கவில்லை,” என்றார் பிரியா பவானி சங்கர். 

இத்தகைய திட்டமிடல்தான் அவருடன் பணி புரிய அனைவரையும் தூண்டுகிறது என்று குறிப்பிட்ட அவர், கார்த்திக் நரேன் மிகவும் திறமை வாய்ந்தவர் என்றார்.

நாயகன் அருண் விஜய்யின் உழைப்பு தம்மை வெகுவாகக் கவர்ந்தது என்றார் பிரியா. கண்ணியம், விடாமுயற்சி, நல்ல பண்புகள் ஆகிய அனைத்தும் அருணிடம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இவை அனைத்தும் சேர்ந்து அருண் விஜய் தற்போது பெற்று வரும் வெற்றிகளை மேலும் அழகாக்குகிறது என்றார்.

அருண் விஜய் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளாகி விட்டது என்பது சொன்னால்தான் தெரிகிறது என்றும், அன்று ‘தில்ரூபா’ பாடலில் பார்த்த அருணைப் போலவே இப்போதும் காட்சி தருவதாக வியந்தார்.

“இங்கிருந்து தொடங்கி மேலும் 25 ஆண்டுகள் நீங்கள் திரையுலகில் பயணிக்க வேண்டும். தயவு செய்து படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்குச் செல்லுங்கள். அதிகாலை 3 மணிக்கெல்லாம் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லாதீர்கள்,” என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார் பிரியா பவானி சங்கர்.

அருண் விஜய்யிடம் தமது அன்பைப் பல முறை சொல்லியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தன் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் அருணும் ஒருவர் என்றார்.

“அவருடன் பணிபுரிந்த போது அவரது தன்னம்பிக்கை, நேர்மறை செயல்பாடுகளைக் கவனித்தேன். 

“வெற்றியைப் பார்த்தவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பது பெரிய விஷயமல்ல. அது வழக்கமான ஒன்றுதான். 

“ஆனால், வெற்றிக்காகப் போராடும்போது அப்படி இருப்பது சுலபமல்ல. வெற்றிக்காகக் காத்திருந்த போதும் அருணிடம் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தது. அவைதான் அவரது பலம்,” என்றார் பிரியா பவானி சங்கர்.

இதையடுத்து பேசிய இயக்குநர் கார்த்திக் நரேன், ‘மாஃபியா’வின் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகரும் என்றும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் நிச்சயம் கவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.