சுடச் சுடச் செய்திகள்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்து; மூவர் உயிரிழப்பு, இயக்குநர் சங்கருக்கு காயம்

சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர்ப் பகுதியில் பூந்தமல்லிக்கு அருகே நேற்று இரவு நடைபெற்றது.

இதற்காக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளைப் பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பில் கமல், காஜல் அகர்வால் உட்பட கலைஞர்கள் பங்கேற்றதாகக் கூறப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் கிரு‌‌ஷ்ணா, 34, சந்திரன், 60, இயக்குநர் சங்கரின் உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 9 பேர் அந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். இயக்குநர் சங்கருக்கும் காலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்த சவீதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் சங்கர், அவரது சகாக்கள் கூடாரத்தில் அமர்ந்து படமாக்கப்பட்ட காட்சிகளை மின்னிலக்கத் திரையில் பார்த்துக்கொண்டிருந்தபோது கிரேன் அந்தக் கூடாரத்தின் மீது விழுததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக தப்பிய கமல், மூன்று சகாக்களை இழந்து நிற்பதாகவும், இந்த விபத்து கொடூரமானது என்றும் உருக்கமாகக் கூறியிருக்கிறார்.

"எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியைவிட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் கமல்.

#இந்தியன் 2 #விபத்து #கமல்