‘நாயகனாகவும் நடிப்பேன்’

‘மாஃபியா’வின் வெற்றி தமிழ்ச் சினிமா ரசிகர்களின் பார்வையை நடிகர் பிரசன்னா பக்கம் திருப்பியுள்ளது. போதை மருந்து கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார் பிரசன்னா. 

இந்நிலையில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, புதுப்படம் தயாரித்து அதில் நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். இதென்ன திடீர் திட்டம் என்று கேட்டால், இதுகுறித்து எப்போதோ திட்டமிட்டு விட்டதாகச் சொல்கிறார்.

“தற்போதுள்ள இளம் நடிகர்கள் நாயகனாக மட்டுமே நடிக்கமுடியும் என்று சொல்வதில்லை. துணைக் கதாபாத்திரங்கள், கௌரவ கதாபாத்திரங்களில்கூட நடிக்கிறார்கள். அர்ஜுன், விஜய் சேதுபதி போன்றவர்களே வில்லனாக நடிக்கத் தயங்குவதில்லை. 

“ஒவ்வொரு நடிகருக்கும் என தனி ரசிகர் வட்டம் உள்ளது. கதாநாயகர்களுக்கும் அப்படித்தான். நான் சினிமாவில் நுழைந்தபோதே இதை உணர்ந்திருந்தேன். 

“இடையில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் அவை எனக்குரிய  பாதைக்கு என்னை திரும்ப அழைத்துச் செல்லக்கூடியவையாக இருக்கவேண்டும். 

“இதை மனதிற் கொண்டுதான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறேன். அதற்குரிய பலன் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்,” என்கிறார் பிரசன்னா.

‘மாஃபியா’ இயக்குநர் கார்த்திக் நரேனின் திறமை தம்மை மிகவும் கவர்ந்திருப்பதாகக் குறிப்பிடும் அவர், நரேனின் வயதுக்கும் அனுபவத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை என்கிறார்.

“என்னிடம் கதை சொல்ல வரும்போதே தனது படம் குறித்து நூறு விழுக்காடு தெளிவாகவும் திட்டமிடலுடனும் இருந்தார். படத்தின் இலட்சினை, திரைக்கதை, வசனம் என்று அனைத்தையும் தயார் செய்த பிறகுதான் என்னிடம் பேசினார். 

“ஒரு நடிகரிடம் இருந்து தனக்கு என்ன தேவை என்பதை தீர்மானிப்பதும் தேவைக்கேற்ப அதைக் கேட்டுப் பெறுவதும் அவரது தனித்திறமை. அவர் இன்னும் நிறைய உயரங்களை எட்டிப் பிடிப்பார்,” என்கிறார் பிரசன்னா.

சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் குறித்து விரைவில் அறிவிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர்,  சூழ்நிலையால் நிர்ப்பந்தப் படுத்தப்படும்போது சொந்த நிறுவனம் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் சில நடிகர்களுக்கு ஏற்படுவதாகச் சுட்டிக் காட்டுகிறார்.

அதிலும் திரையுலகில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கவனிக்கும்போது, இத்தகைய முடிவைத் தவிர்க்க முடியவில்லை என்கிறார் பிரசன்னா.

“மொத்த திரையுலகமும் தத்தளிக்கிறது. ஒருசில படங்கள் மட்டுமே நஷ்டத்தைத் தராமல் உள்ளன. இத்தகைய ஒரு சூழ்நிலையில் நடிகராக மட்டும் இருப்பது மிகக் கடினமான விஷயம். போட்டியும் அதிகமாகிவிட்டது. அதற்காக படங்களே தயாரிக்காமல் இருக்கமுடியாது,” என்கிறார் பிரசன்னா.

சிரமத்தில் உள்ள படைப்பாளிகள் அடுத்து இணையத் தொடர்கள் உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் அவர், திரைப்படமாக எடுக்க முடியாத நல்ல கதைகளை இணையம் வழி வெளியிடுவது நல்ல தீர்வாக அமையும் என்கிறார்.

“இதன்மூலமாகவும் பரவலான அளவில் ரசிகர்ளைச் சென்றடைய முடியும். டிஜிட்டல் தளம் காரணமாக சினிமா அழிந்துவிடும் என்று அர்த்தமல்ல,” என்று சொல்லும் பிரசன்னா, வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றால் அவற்றில் நடிக்கத் தாம் தயங்கியதே இல்லை என்கிறார்.

அதேசமயம் தொடர்ந்து ‘சாக்லேட் பாய்’ கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லாததால்தான் எதிர்மறை, குணசித்திர கதாபாத்திரங்களை அவ்வப்போது தேர்வு செய்வதாகக் குறிப்பிடுகிறார்.

“தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டு பலரும் அணுகுகிறார்கள். அவ்வாறு நடிக்கத் தயார். எனினும் ‘வடசென்னை’யில் உள்ள வில்லனாக நடிக்க விரும்புகிறேன்,” என்கிறார் பிரசன்னா.

‘மாஃபியா’வில் இவரது நடிப்பு மிக நன்றாக இருந்ததாக மனைவி சினேகா மட்டுமல்லாமல் திரையுலக நண்பர்கள் பலரும் தொடர்புகொண்டு பாராட்டு மழை பொழிந்தார்களாம்.