பிரியா: ஒரு தந்தையைப் போல் பார்த்துக்கொள்கிறார் காதலர்

தனது காதலர் குறித்து ஒவ்வொரு பேட்டியிலும் மறவாமல் குறிப்பிடுகிறார் பிரியா பவானி சங்கர். ‘மாஃபியா’ இவரது மிடுக்கான, துருதுரு நடிப்பு பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் தனது காதலர் தனக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர் என அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பிரியா.

தனது தந்தைக்கு அடுத்தபடியாக தம்மை நன்றாகப் பார்த்துக் கொள்ளக்கூடியவர் காதலர்தான் என்று கூறியுள்ளார்.

“இன்னும் சொல்லப்போனால் அவர் எனக்காக தனது உயிரை கொடுக்கும் அளவுக்கு அன்பு பாராட்டுகிறார். இந்த உறவை நான் உண்மையாகவே மதிக்கிறேன்.

“நான் பிரபலமாகாத சமயத்திலும் என்னை நேசித்தவர். அன்று முதல் இன்றுவரை அவர் மாறவே இல்லை,” என்கிறார் பிரியா.

தற்போது இவர் தமிழில் சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘மேயாத மான்’ படத்தில் நடித்த போது இருந்த தயக்கம், ஒருவித பயம் எல்லாம் தற்போது அடியோடு இல்லை என்று சொல்பவர், தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகக் கூறப்படுவது எல்லாம் வெறும் வதந்தி எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

“எனது காதலர் குறித்து அடிக்கடி ஏதாவது சொல்வதும் சமூக வலைத் தளங்களில் பதிவிடுவதும் ஏன் என்று கேட்பதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

“ஒரு தந்தையைப் போல் பார்த்துக் கொள்பவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவர் என்னிடம் காட்டும் அன்புக்கு இணையாக நானும் அவரை நேசிக்கிறேன்,” என்கிறார் பிரியா.