கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

2 mins read
e543f920-2e28-4093-8fd8-154186876242
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கர் சல்மாவுடன் இணைந்து நடித்துள்ளார் ரிது வர்மா  நடித்துள்ளார். படம்: ஊடகம் -

துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. தலைப்பைக் கேட்டதும் முழுநீளக் காதல் படம் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம் என்கிறார் துல்கர்.

இதில் காதலைக் கடந்து நிறைய திருப்பங்களும் ரகசியங்களும் உள்ளனவாம். தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கான கதையை எழுதும்போது எந்த நாயகனையும் இவர் மனதில் நினைத்திருக்கவில்லையாம். ஆனால் எழுதி முடித்ததும் துல்கர்தான் நினைவுக்கு வந்தாராம்.

உடனடியாக அவரை நேரில் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். கதை சொன்ன விதம் துல்கருக்கு மிகவும் பிடித்துப் போனதாம். அதனால் உடனே கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார்.

"எனக்குப் பல குரல்களில் பேசும் திறமை உண்டு. 75 பேரின் குரல்களில் பேசுவேன். மேலும் கதை சொல்லும்போதுகூட அந்தந்த கதாபாத்திரங்களுக்கான தொனியில்தான் பேசுவேன்.

"ஆனால் துல்கரிடம் கதை சொன்னபோது எந்தவித முகபாவனையையும் அவர் வெளிப்படுத்தவில்லை. எனக்கு உள்ளூர அதிர்ச்சி. ஒருவேளை கதை பிடிக்கவில்லையோ என்று பயந்தேன்," என்கிறார் பெரியசாமி.

ஆனால், இவர் சற்றும் எதிர்பாராத வகையில் மறுநாளே தொடர்பு கொண்டு பேசிய துல்கர், தயாரிப்பாளரையும் அறிமுகப்படுத்தி வைத்தாராம். இயக்குநர் கௌதம் மேனனும் இதில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறாராம்.

"கௌதம் சாருக்கு நடிப்பில் இது ஏழாவது படம். எனது முதல் படத்தில் அவர் இருக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளது. கதை எழுதும்போதே கௌதம் சாரின் நினைவுதான் வந்தது.

"இருப்பினும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் இடைவிடாமல் அவரைச் சுற்றி வந்த பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார்," என்கிறார் தேசிங் பெரியசாமி.

இந்தப் படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடித்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே தெலுங்கு தேசத்தில் நல்ல வரவேற்புள்ளது. 'மசாலா காஃபி' என்ற இசைக்குழு இப்படத்துக்கு இசையமைத்திருப்பது மற்றொரு சிறப்பம்சம். துல்கர் சல்மான் குறித்து?

"தொழிலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் உண்மையான அர்ப்பணிப்புடன் நடிக்கிறார்.

"அவரிடம் கதை சொல்லி முடித்து 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கால்ஷீட் கிடைத்தது. ஆனாலும் நான் முதலில் நேரில் சந்தித்தபோது விவரித்த அக்காட்சிகள் அனைத்தையுமே நினைவில் வைத்திருந்தார்.

"படப்பிடிப்பின்போது எந்த வகையிலும் அவர் என் பணியில் குறுக்கிடவில்லை. தமிழில் நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என விரும்புகிறார்.

"ரிது வர்மாவும் திறமை வாய்ந்த நல்ல நடிகை. படப்பிடிப்பு துவங்கும் முன்பே வசனங்களை நன்கு மனப்பாடம் செய்துவிடுகிறார். படப்பிடிப்பு தளத்தில் வசனங்களை சற்றே மாற்றியமைத்தாலும்கூட அந்த வித்தியாசத்தைக் கண்டு

பிடித்து விடுவார்.

"குறும்படங்களில் நடித்து சினிமாவுக்கு வந்துள்ள இவருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு," என்று பாராட்டுகிறார் இயக்குநர் தேசிங் பெரியசாமி.