கணவரின் நடிப்பை மெச்சும் சினேகா

‘மாஃபியா’ படத்தில் பிரசன்னாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ள நிலையில் அவரது மனைவி சினேகாவும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

தற்போது கிடைத்துள்ள வரவேற்பும் பாராட்டும் தன் கணவரை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் அவர் நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார். 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஃபியா’வில் நாயகன் அருண் விஜய்யுடன் மோதும் வில்லனாக நடித்துள்ளார் பிரசன்னா. இந்நிலையில், தனது கணவரின் பணி குறித்து பெருமைப்படுவதாக சினேகா குறிப்பிட்டுள்ளார்.

“மிகவும் கச்சிதமாக, உண்மையாக, ஸ்டைலாக இருந்தது உங்கள் நடிப்பு. செய்யும் பணியில் நீங்கள் என்றுமே சிறந்தவர்தான். ஆனால் இது சிறந்தது என்ற அளவையும் கடந்திருந்தது.

“உங்களை மக்கள் அங்கீகரித்ததில் மிக்க மகிழ்ச்சி. அனைத்து அழைப்புகள், பாராட்டுகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி.  ரசிகர்களிடம் இருந்து கிடைத்திருக்கும் இந்த உற்சாகம் உங்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும்.  ‘மாஃபியா’ குழுவுக்கு எனது வாழ்த்துகள்,” என்று தமது பதிவில் மேலும் கூறியுள்ளார் சினேகா.

இந்தப் படத்தில் திவாகரன் குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரசன்னா.

தொடர்ந்து எதிர்மறை கதா பாத்திரங்களில் நடித்து வரும் கணவரிடம், நாயகனாக நடிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளாராம் சினேகா.