‘அவரது கண்களைப் பார்த்தால் போதும், நடிப்பு தானாக வரும்’

அழகான புன்சிரிப்பும் வெள்ளந்தியான பேச்சும்தான் பிரியா பவானி சங்கருக்கு பலரது நட்பையும் பாராட்டையும் அன்பையும் பெற்றுத் தந்திருக்கிறது என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். 

நேரில் பார்த்தால் இது அப்பட்டமான உண்மை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தற்போது ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரியா.

கமல்  குறித்துப் பேசத் தொடங்கினால் பிரியா அதை நிறுத்துவதற்கு குறைந்தது பத்து நிமிடங்கள் ஆகிறது.

கமலின் கண்களைப் பார்த்தாலே போதும் ஒருவரால் சினிமா நடிப்பில் தேர்ச்சி பெற்றுவிட முடியும் என்கிறார்.

“படப்பிடிப்பின் போது கமல் சார் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதில்தான் எத்தனை பாவங்களை வெளிப்படுத்துகிறார்? 

“என்னைப் பொறுத்தவரை அவரது கண்களைப் பார்த்தால் போதும், நமக்கும் நடிப்பு வந்துவிடும். அவ்வளவு யதார்த்தமாக நடிக்கிறார். 

“அவரது கண்களை நேரடியாகச் சந்தித்தால் ‘உன் திறமையை எல்லாம் வீட்டில வச்சிட்டு வந்திரு’ என்று  சொல்வது போலவே தோன்றும்.

“எனக்குத் தெரிந்து சிக்கலான கதாபாத்திரம் என்று கமல் சாருக்கு எதுவுமே கிடையாது என்பேன்.

“இவ்வளவு பிரபலமான பிறகும், ஏராளமான படங்களில் நடித்த பிறகும் இன்னும் சினிமா மீது குறையாத காதல் கொண்டிருக்கிறார்,” என்கிறார் பிரியா பவானி சங்கர்.

கமலுடன் எதுகுறித்து வேண்டுமானாலும் பேசலாம் என்றும், உலக நடப்புகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார் என்றும் வியக்கிறார்.

“உண்மையில் இவ்வளவு விவரங்களை எப்படி தெரிந்து கொள்கிறார்? எப்படி இவருக்கு நடிப்பு, பொது வாழ்க்கை, இலக்கியம் என்று அனைத்துக்கும் செலவிட நேரம் இருக்கிறது என்று நினைத்து வியந்து போகிறேன்.”

சினிமாவில் கால்பதித்த போது இந்தத் துறையின் வீச்சு எப்படிப்பட்டது என்பதை தாம் உணரவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்பவர், ஒருசில மாதங்கள் தீவிர முனைப்புக் காட்டாமல் ஜாலியாக நடித்து வந்ததாகச் சொல்கிறார்.

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்த போதுதான் நல்ல அனுபவமும் சினிமாவைப் பற்றிய தெளிவும் கிடைத்ததாம்.

“சத்யராஜ், பாரதிராஜா உட்பட பல மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு அது. இந்த வயதிலும் சத்யராஜ் சாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால், அதற்கு அவரது திறமையும் ஈடுபாடும்தான் காரணம்.

“படப்பிடிப்பின்போது காட்சிகளையும் தங்கள் நடிப்பையும் மெருகேற்ற இவரைப் போன்ற அனுபவக் கலைஞர்கள் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதை நேரில் கண்டபிறகு நாமும் எந்தளவுக்குப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

“சினிமா நிபுணத்துவம் என்றால் என்ன என்பது பாண்டிராஜ் சார் இயக்கத்தில் நடித்தபோது தெரியவந்தது. பல கோடிகள் செலவழித்து எடுக்கப்படும் படத்தில் நமக்கான நிமிடங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காரணம், அந்தக் காட்சிக்காகவும் பல லட்சங்கள் செலவாகிறது,” என்று பொறுப்புடன் பேசுபவர், கடந்த ஓராண்டு காலமாக மிகுந்த கவனத்துடன் நடைபோட்டு வருவதாகச் சொல்கிறார்.

பிரியாவின் காதல் விவகாரம் குறித்து அண்மைக் காலமாக அதிகம் பேசப்படுகிறது. இதுகுறித்துக் கேட்டால் மறைப்பதற்கோ, கூடுதலாகப் பேசுவதற்கோ ஏதுமில்லை என்ற பதிலே வருகிறது.

“என் விஷயத்தில் என்ன நடக்கிறது என்று எனக்கு தலைமையேற்று இருக்கும் நபருக்குத் தெரியும் (சிரிக்கிறார்). பிறகு இதில் சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது. சில விஷயங்கள் தொடர்பாக நான் அதிகம் அலட்டிக் கொள்வது இல்லை.

‘மாஃபியா’ குறித்து?
“நான் என் நடிப்புத் திறமையைவிட இயக்குநர்களை அதிகமாக நம்புகிறேன். ஏனெனில் நம் நடிப்பு சரியாக இருக்கிறதா? என்பதை அவர்கள் உடனுக்குடன் சொல்லிவிட முடியும்.

“‘மாஃபியா’வில் இதே நடைமுறையை தான் பின்பற்றினேன். படத்தின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது எனில், ரசிகர்கள் என்னை இந்தக் கதாபாத்திரத்தில் ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்பது கூடுதல் உற்சாகம் தருகிறது,” என்கிறார் பிரியா பவானி சங்கர்.

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை என்று சக நாயகிகள் போலவே பேசினாலும், உண்மையில் இந்தக் கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கப்போவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் பிரியா. பிற மொழிகளைவிட தமிழுக்குத்தான் முன்னுரிமை அளிப்பாராம்.

#பிரியா பவானி சங்கர் #கமல் #இந்தியன்2 #தமிழ்முரசு