ரஞ்சித்: எனக்கும் அந்தப் பதற்றம் இருந்தது

ரஞ்சித்: எனக்கும் அந்தப் பதற்றம் இருந்தது

1 mins read
2a2d983f-0d43-4b90-89f8-34b8256c821c
'அட்டகத்தி'யின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றபோது மிகவும் பதற்றமாக உணர்ந்ததாக இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.  படம்: ஊடகம் -

தனது முதல் படமான 'அட்டகத்தி'யின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றபோது மிகவும் பதற்றமாக உணர்ந்ததாக இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

'நறுவி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது ஒரு படத்தை உருவாக்குவதைவிட அதை வெளியிடுவதுதான் மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது என்கிறார் ரஞ்சித்.

"இந்தப் படம் வெற்றி பெறுவதன் மூலம் இதில் பங்கேற்ற அனைவரும் வலுவானவர்களாக மாறுவார்கள் என நம்புகிறேன். பாசிச வெறி கொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்த விழா நடைபெறுகிறது.

"இப்படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் இயக்குநர் எப்படி பதற்றமாகக் காணப்படுகிறாரோ அப்படித்தான் நானும் 'அட்டகத்தி' விழாவின்போது காட்சியளித்தேன். ஒரு படத்தை வெளியிடுவதில் பல்வேறு தடைகள் முளைக்கலாம். அவற்றையும் மீறி இந்தப் படம் வெற்றிபெறும் என நம்புகிறேன்," என்றார் பா. ரஞ்சித்.

இந்த உலகில் யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவரவர்களின் தனிப்பட்ட முயற்சிகள்தான் அவரவருக்கான அடையாளங்களைப் பெற்றுத் தரும் என்றார். தரமான படைப்புகளைத் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் கைவிடுவதில்லை என்றும் அதுதான் பெரும் பலம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.