கதாநாயகியாக நடித்துக்கொண்டே மகள், தங்கை வேடங்களில் நடிப்பது ஏன்? என்று கேட்பவர்களுக்கு, ஒரு நடிகை எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் நிவேதாவின் பதிலாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல, வித்தியாசமான வேடங்களைவிட முதலில் வில்லியாக நடிக்கத்தான் விரும்புகிறாராம்.
"நான் வில்லியாக நடித்தால் எப்படி இருக்கும் என எனக்கு நானே பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் அது வித்தியாசமான புதுமாதிரியான அனுபவமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, இதுவரை நாயகியாகவும், நல்ல பெண்ணாகவும் மட்டுமே ரசிகர்கள் என்னைத் திரையில் பார்த்துள்ளனர்.
"முதல் முறையாக என்னைத் திரையில் வில்லியாகப் பார்க்கும்போது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது எனப் பார்க்கவேண்டும். இந்த ஆசை நீண்ட நாட்களாகவே மனதில் இருக்கிறது," என்கிறார் நிவேதா.
அழகான இளம்பெண்ணாக மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்பதுதான் நாயகிகளின் ஆசையாக இருக்கும். இவரோ அதற்கு நேர்மாறாக இருக்கிறார்.
"கோரமான வில்லியாகவும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக இந்தச் சவாலை எதிர்கொள்ள விரும்புகிறேன். அழகான நடிகை என்பதோடு திறமையான நடிகை என்றும் பெயரெடுப்பதையே விரும்புகிறேன்," என்கிறார் நிவேதா.
ரசிகர்களையும் நெருக்கமானவர்களையும் சந்திக்கும்போதெல்லாம் ரஜினி பற்றியேதான் எல்லோரும் விவரம் கேட்கிறார்களாம். நிவேதாவும் தனக்குச் தெரிந்ததை எல்லாம் சொல்லி சமாளித்துக்கொண்டிருக்கிறார்.
"ரஜினி சாரின் நடிப்பு பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவர் திரையுலகம், நடிப்பு ஆகியவற்றைத் தவிர இதர பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசுவார். குறிப்பாக மதம் சாராத மனிதனுக்கு தேவையான ஆன்மீக விஷயங்கள் குறித்து அவர் விவரிப்பதைக் கேட்க ஆச்சரியமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்," என்று சொல்லும் நிவேதா, அண்மைய பேட்டியில் தனது வருங்காலக் கணவர் குறித்த எதிர்பார்ப்புகளையும் விவரித்துள்ளார்.
எந்த வகையான ஆண்களைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு பொய் பேசும் ஆண்களைப் பிடிக்காது என்று பதில் அளித்துள்ளார்.
"திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரை எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக்கூடாது. அத்தகையவர்களை எந்தளவுக்குப் பிடிக்காதோ அதைவிட உண்மை பேசுபவர்களை இருமடங்கு அதிகம் பிடிக்கும். எனக்குப் பயணம் செய்வது ரொம்பப் பிடித்தமான ஒன்று. எனவே கணவராக வருபவர் என்னைப் போல் பயணங்களை விரும்புகிறவராக இருக்க வேண்டும்," என்கிறார் நிவேதா தாமஸ்.
'தர்பார்' படத்துக்குப் பிறகு ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்தமான நடிகையாகிவிட்டார் இவர். எங்கு சென்றாலும் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு பாசம் காட்டுகிறார்களாம்.
"ரஜினி சாரின் மகளாகவே ரசிகர்கள் என்னைக் கருதுகிறார்கள். ரஜினி, கமல், மோகன்லால் என சினிமா உலகின் மூன்று மிகப்பெரும் ஜாம்பவான்களுக்கு மகளாக நடித்திருக்கிறேன். இப்படிப்பட்ட வாய்ப்பு எவ்வளவு பேருக்கு அமையும்? அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்," என்கிறார் நிவேதா.
ஒவ்வொருவரிடம் இருந்தும் நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிடுபவர், படப்பிடிப்பின்போது மூவரது ஆற்றலையும் கண்டு வியந்துபோனதாகச் சொல்கிறார்.
என்னதான் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தாலும், மகள், தங்கை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பதுதான் நிவேதாவின் முடிவாம்.
'தர்பார்' படத்தையடுத்து தமிழில் இன்னொரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம் நிவேதா.

