'எட்டுத்திக்கும் பற' படம் சமுதாயத்துக்கு ஏற்ற நல்ல கருத்துகளைச் சொல்லும் வகையில் உருவாகி இருப்பதாக அதன் இயக்குநர் கீரா தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை இளையர்களும் பெரியவர்களும் கண்டிப்பாக பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமுத்திரக்கனி, சாந்தினி, முனீஷ்காந்த், சாவந்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'எட்டுத்திக்கும் பற'. தொடக்கத்தில் வேறு தலைப்பு வைத்திருந்தனர். எனினும் சில எதிர்ப்புகள் காரணமாக படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது சாதி வெறிக்கும் ஆணவக் கொலைக்கும் எதிரான படைப்பு என்று கூறியுள்ளார் இயக்குநர் கீரா. குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூர பக்கங்களை விவரிப்பதாக இருக்குமாம்.
"ஆணவக் கொலை நம் சமுதாயத்துக்கு ஒரு சாபக்கேடாக அமைந்துள்ளது. ஆணவக் கொலையின் கொடூரத்தை ரத்தமும் சதையுமாக இந்தப் படத்தில் விவரித்திருக்கிறோம்.
"வெறுமனே பரபரப்புக்காகவும் வசூலுக்காகவும் காட்சிகளை அமைக்கவில்லை. மாறாக இத்தகைய கொடுமைகளுக்கு என்ன தீர்வு என்பதையும் இந்தப் படைப்பு அலசி இருக்கிறது. அந்த வகையில் தைரியமாக ஒரு நல்ல காரியத்தை முன்னெடுத்திருக்கிறோம்.
"தலைப்பில் இடம்பெற்றுள்ள 'பற' என்பது சாதியத்தின் குறியீடா என்று சிலர் கேட்கின்றனர். நிச்சயமாக இது சாதியின் குறீயீடு அல்ல. 'பற' என்றால் பறத்தல் என்று அர்த்தம். அதாவது விடுதலையின் குறியீடு என்று அர்த்தம் கொள்ளலாம்.
"இதை மனதில் வைத்தே இந்தத் தலைப்பைத் தேர்வு செய்தோம். மற்றபடி எந்தவொரு சாதிக்கு ஆதரவாகவும் இந்தப் படத்தை உருவாக்கவில்லை," என்று இயக்குநர் கீரா தெரிவித்துள்ளார்.

