மலேசிய சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சி விரைவில் மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி சென்னையில் செய்தியாளர்களுக்கு இசைஞானி இளையராஜா பேட்டியளித்தார்.
அப்போது இசை எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என்றார் அவர்.
"எனது இசையை, உங்களுக்கு கிடைத்த பரிசு என்கிறீர்கள். என் இசை எனக்கு கிடைத்ததே கடவுள் கொடுத்த பரிசுதான். இந்த உடல் எப்படி வந்தது என நமக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேகத்தோடு இந்த உலகத்துக்கு வருகிறோம். ஒவ்வொரு துறையில் நுணுக்கம் பெற்றவர்களாக வளர்கிறோம்.
"இப்படி இறைவன் எல்லா விஷயங்களையும் கொடுத்திருக்கிறான் என்பதே அதிசயம். அந்த வகையில் இறைவன் எனக்கு இசையை பெரிய பரிசாக கொடுத்துள்ளான். தாய் மூகாம்பிகைக்காக 'ஜனனி ஜனனி' என்ற பாடலை இசை அமைப்பேன் என்று எனக்குத் தெரியுமா? அது தெய்வீகத்தால் அமைந்தது. ஒரு பாடலை நீங்கள் கேட்கிறீர்கள். நான் இசை அமைக்கவில்லை என்றால் அந்தப்பாடலே இல்லை. அதுதான் இங்கே முக்கியம்.
"என் இசை நிகழ்ச்சி மலேசியா சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார் இளையராஜா.
இந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, மதுபாலகிருஷ்ணன், பவதாரிணி, ஸ்வேதா மோகன், உஷா உதூப் உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
மலேசியாவில் வரும் 14ஆம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றும் அதற்கான ஏற்பாடுகளை மலேசியா சுற்றுலா கழகம் செய்துள்ளது என்றும் இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.
இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியில் சுமார் 10,000 ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

