இயக்குநர் ஆர்.கண்ணன் தானே கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் இயக்கத்தில் ஏற்கெனவே 'ஜெயம் கொண்டான்' மற்றும் 'கண்டேன் காதலை' படங்களில் சந்தானம் நடித்திருந்தார். "ஆனால் அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் முறை. பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் சாதாரண ஊழியராகப் பணியாற்றும் நாயகன் எப்படி உயர் பதவிக்குச் செல்கிறான் என்பதே கதை," என்கிறார் கண்ணன்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, சந்தானத்தின் பாட்டியாக நடிக்கிறாராம். நாயகிகளாக தாரா அலிஷா, சுவாதி முப்பாலா ஆகிய இருவரும் நடிக்கின்றனர். மேலும் ஆனந்த்ராஜ், 'மொட்ட' ராஜேந்திரன், சிவசங்கர், 'லொள்ளு சபா' மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்த ரதன் இசையமைத்துள்ளார்.

