'வாழ்த்து கூற மாட்டேன்'

'வாழ்த்து கூற மாட்டேன்'

3 mins read
2f1a74f1-1dd1-4a8c-9812-f9e472393e2e
பெண்கள் தினம் என்பது ஒருநாள் மட்டுமல்லாமல் தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். படம்: ஊடகம் -

அனைத்துலக பெண்கள் தினம் என்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

பெண்கள் தினம் என்பது ஒருநாள் மட்டுமல்லாமல் தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் வெளியே செல்லும்போது தைரியமாக இருக்க வேண்டும் என்றும், தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ளும் மனத்திடம் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்றும் வரலட்சுமி அறிவுறுத்தி உள்ளார்.

"ஆண்களுக்கு அருகே பெண்களும் சரிசமமாக இருக்கிறோம். காவல்துறையையோ, நீதிமன்றத்தையோ சார்ந்து இருப்பது பலன் தராது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

"நாம் வெளியே செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நம் வீட்டில் இருக்கும் மிளகாய்ப் பொடி, மிளகு ஸ்ப்ரே உள்ளிட்டவை பலன் தரும். அவற்றை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

"நமக்கு ஏதாவது ஒன்று நடந்தால், அதை முதலில் சந்திக்கப் போவது நாம் மட்டும் தான். அதுவும் தனியாகத் தான் சந்திக்கப் போகிறோம். முதலில் தனியாக இருக்கும்போது தைரியமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்," என வரலட்சுமி அறிவுறுத்தி உள்ளார்.

ஒரு வாளி தண்ணீருக்காக பெண்கள் எந்தளவு கோபமாக சண்டையிடுகிறார்கள் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதன்மூலம் பெண்களுக்கு சக்தி இல்லை என்று சொல்வது அர்த்தமற்ற வாதமாகி விடுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை என்று வந்துவிட்டால், பெண்கள் எப்படியெல்லாம் சண்டை போடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், பெண்களுக்கு சக்தி இருக்கிறது என்பதை முதலில் அவர்களும் உணர வேண்டும் என்றும் வரலட்சுமி கூறியுள்ளார்.

"பெண்கள் தின நல்வாழ்த்துகள் எனச் சொல்வேன் என்று உங்களில் பலரும் எதிர்பார்த்தீர்கள். ஆனால் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். என்னைப் பொறுத்தவரை தினமும் பெண்கள் தினம் தான்.

"ஒரு நாள் மட்டும் கொண்டாடிவிட்டு மறந்து போவது சரியல்ல. ஏனெனில் மீதமுள்ள நாட்களில் எல்லாம் அன்றாடம் நாளேடுகளைப் பார்க்கும்போது, பாலியல் துன்புறுத்தல், தற்கொலை என பல்வேறு செய்திகள் வெளியாகின்றன. அவற்றை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

பெண்ணாக இருப்பதில் பெருமிதம் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பெண்ணாகப் பிறந்ததை யாரும் பாரமாக நினைக்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

இத்தகைய காரணங்களால் அனைத்துலக பெண்கள் தினத்துக்கு என தம்மால் தனித்து வாழ்த்துச் சொல்ல இயலாது என்று வரலட்சுமி சரத்குமார் மேலும் கூறியுள்ளார்.

தமிழ்ச் சினிமா நடிகைகளில் தைரியமாகவும் வெளிப்படையாக வும் பேசக்கூடிய நடிகைகளில் வரலட்சுமியும் ஒருவர்.

அண்மைய பேட்டி ஒன்றில், தாம் வாரிசு நடிகை என்பது நன்கு தெரிந்திருந்தும்கூட பட வாய்ப்புக்காகப் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தாம் வற்புறுத்தப்பட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பெண்களுக்கு உதவும் வகையில் ஓரு சேவை அமைப்பை துவங்கி, தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்பட்டு வருபவர், சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து வருவதாகவும் சொல்கிறார்.

தற்போது தமிழில் 'வெல்வெட் நகரம்', 'காட்டேரி' உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் எனும் தாகம் தமக்கு இன்னும் தீரவில்லை என்று சொல்லி வருகிறாராம்.

அத்தகைய கதாபாத்திரங்கள் உள்ள கதைகள் உள்ள இளம் இயக்குநர்கள் வரலட்சுமியை உடனே அணுகலாம்.

கதை பிடித்திருந்தால் உடனே கால்ஷீட் ஒதுக்க தயார் என்கிறார் வரலட்சுமி.