மீண்டும் இணைந்த இயக்குநர், கதாநாயகன்

மீண்டும் இணைந்த இயக்குநர், கதாநாயகன்

2 mins read
4a19841d-c4f5-485f-9ad0-11532bfd6566
புதிதாக அறிமுகமாகும் நாயகனைப்போல் தம்மைக் கருதிக்கொண்டு முழுமூச்சாகப் பணியாற்றுவதுதான் அருண் விஜய்யின் பலம் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். படம்: இணையம் -

கோலிவுட்டில் அருண்விஜய் கால்பதித்து 25 ஆண்டுகள் ஆகிறது என்பதை அவரே நம்ப மறுக்கிறார். இப்போதுதான் சினிமாவில் அறிமுகமானதுபோல் உணர்வதாகவும் சொல்கிறார்.

இப்படி புதிதாக அறிமுகமாகும் நாயகனைப்போல் தம்மைக் கருதிக்கொண்டு முழுமூச்சாகப் பணியாற்றுவதுதான் அருண் விஜய்யின் பலம் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

'அருண் விஜய்-31' (ஏவி31) என்று குறிப்பிடப்படும் அவரது 31ஆவது படத்தை அறிவழகன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே 'குற்றம் 23' படத்தை இயக்கியவர்.

அப்படத்தில் இவரது கச்சிதமான திட்டமிடுதல், காட்சிகளை உருவாக்கும் நேர்த்தி ஆகியவை மிகவும் பிடிக்கவே மீண்டும் இணைவோம் என்று அருண் விஜய் கூறியிருந்தாராம். அவ்வாறு இணைந்ததை அடுத்து இந்தப் புதுப்படம் உருவாகி வருகிறது.

"இந்தப் படத்துக்கான சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக இருக்கும். அருண் விஜய்யின் ரசிகர்கள் நிச்சயம் பிரமித்துப் போவார்கள். டெல்லி, ஆக்ராவில் இவற்றைப் படமாக்குகிறோம்.

"மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ள படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் போக யமுனை நதிக்கரையிலும், ஆக்ரா, டெல்லியின் நெரிசலான சந்தைகளிலும் இரு பாடல் காட்சிகளைப் படமாக்க உள்ளோம்," என்கிறார் இயக்குநர் அறிவழகன்.

இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரெஜினா. மேலும் பதின்ம பருவ அழகியாக (மிஸ் டீன் இன்டர்நேஷனல் 201) பட்டம் பெற்ற ஸ்டெசி படேல் என்பவரையும் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறக்கி உள்ளனர். பகவதி பெருமாள் கனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம்.

"இப்போது எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப சில படங்கள் அமைவது திருப்தியளிக்கிறது. இந்நிலையை எட்டிப்பிடிக்க சிரமப்பட்டேன் என்பதைப் பலமுறை கூறிவிட்டேன்.

"'இந்தப் பையனுக்கு சினிமா ஒத்துவராது. வேறு ஏதாவது தொழிலைக் கவனிக்கச் சொல்லுங்கள்' என்று பலர் என் காதுபடவே அப்பாவிடம் கூறியுள்ளனர். ஆனால், நான் வருத்தப்படுவேன் என்பதால் அவர் மௌனமாகவே இருந்தார். எனினும் தொடர் உழைப்பும் விடாமுயற்சியும் எனக்குரிய பலனையும் வளர்ச்சியையும் அளித்துள்ளன," என்கிறார் அருண் விஜய்.

அடுத்தடுத்த வெற்றிப் படங்களை அடுத்து தாம் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், சினிமாவில் சம்பளத்தைவிட ரசிகர்களின் ஆதரவு தான் மிக முக்கியமானது என்று கூறியுள்ளார்.

ரசிகர்களிடம் கோபித்துக் கொண்டதுண்டா? "அவர்களின் அன்பு பலமுறை என்னை திக்குமுக்காடச் செய்திருக்கிறது. ஒருமுறை படப்பிடிப்பின்போது நிறைய ரசிகர்கள் கூடிவிட்டனர். அவர்களை நோக்கி அவ்வப்போது கையசைத்தபடி, சத்தம் போடாதீர்கள் என கேட்டுக் கொண்டேன். அப்போது ஒருவர் இடைவிடாமல் என் சக நடிகையை விமர்சித்தபடி இருந்தார். இதனால் அவரை அழைத்து, 'இப்படியே செய்தால் அவ்வளவுதான்' என மிரட்டலாக கூறினேன். அந்த இளைஞர் பிறகு அமைதியாகி விட்டார். இது மட்டுமே நான் அதிகம் கோபப்பட்ட சம்பவம். அதேசமயம் ரசிகர்கள் எங்கள் மீது கொண்டுள்ள அன்பும் நன்றாகத் தெரியும்," என்கிறார் அருண் விஜய்.

#அருண் விஜய்