வயல்களில் சூரிய மின்சக்தி: விரைவில் திட்டம் தொடங்கும்

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் விவசாய நிலங்களை அரசாங்கம் குத்தகைக்கு எடுத்து மின்சக்தி தயாரிக்கும் திட்டம் விரைவில் நடப்புக்கு வரும் என்று நேற்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் கடலாடி என்ற இடத்தில் பெரிய அளவில் நடப்புக்கு வரவிருந்த சூரிய மின்சக்தித் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

இது பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான திமுக விளக்கம் கேட்டது. அதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கடலாடி மின்சக்தித் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தடை ஆணை பெறப்பட்டதால் அந்தத் திட்டத்தைத் தொடங்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதனால் கொடுக்கப்பட்ட காலஅவகாசம் முடிந்துவிட்டதாகச் சொல்லி மத்திய அரசே அந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இருந்தாலும் கர்நாடக மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் விவசாய நிலங்களை அரசாங்கமே குத்தகைக்கு எடுத்து சூரிய ஒளி மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்க விரைவில் திட்டம் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்று இதர சில அமைச்சர்களும் பல திட்டங்களை அறிவித்தனர்.

மீனவ மக்களின் சமூகம், கல்வி, பொருளியல் முன்னேற்றத்திற்காக ரூ.1,200 கோடி திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தரங்கம்பாடி, வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இவ்வேளையில், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

இப்போது இந்தத் திட்டம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் நடப்புக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளில் இருந்தபடியே இணையம் மூலம் பல வசதிகளையும் இப்போது அனுபவிக்க முடிகிறது என்றார் அமைச்சர்.