நடிகர் விஷாலுக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் இடையேயான மோதல் பெரிதாகி உள்ளது. இந்நிலையில் தனது இயக்கத்தில் உருவாகி வந்த 'துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து மிஷ்கின் விலகியுள்ளார்.
இதையடுத்து அந்தப் படத்தை தாமே இயக்குவதாக விஷால் அறிவித்துள்ளார். இந்தப் படம் தொடர்பாக விஷாலுக்கு 15 நிபந்தனைகளை விதித்தாராம் மிஷ்கின். இதனால் விஷால் அதிருப்தி அடைய மிஷ்கின் விலகியுள்ளார்.
இந்நிலையில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள விஷால், திரைப்பட இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கிக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓர் இயக்குநராக தாம் சிறப்பாகச் செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மிஷ்கினை மறைமுகமாகக் குறிப்பிட்டு 'இத்தகைய நபர்களுக்கு இரையாகி விடாதீர்கள்' என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
"கனடா மற்றும் இங்கிலாந்தில் கதை எழுத விரும்பிய ஒரு இயக்குநர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்ச ரூபாய் செலவழித்து, அதற்கும் மேலாகப் பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தைத் தேர்வு செய்யாமல் படப்பிடிப்பை நடத்தி, தயாரிப்பாளரின் 13 கோடி ரூபாய் பணத்தைச் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஓர் இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதால் இயக்குநர் விலகினாரா? இல்லை.
"படத் தயாரிப்பின்போது, இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக்காட்டினால் அது தவறா? இங்கிலாந்தில் 3 முதல் 4 மணிநேரப் படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை.
"ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் படமாக்குவதற்குப் பதிலாக, செலவைக் குறைக்க இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை.
"நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால், உங்கள் சொந்த குழந்தையை நீங்கள் அனாதை இல்லத்தில் கைவிடுவது போல மோசமாக இருக்கிறது," என்று விஷால் அறிக்கையில் கூறியுள்ளார்.
எத்தகைய தயாரிப்பாளராக இருந்தாலும், அவர்கள் தாம் பட்ட கஷ்டங்களை அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது தாம் படும் சிரமங்களை அனுபவிக்கக் கூடாது என்பது மட்டுமே தமது அறிக்கையின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையைச் சந்திக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
"இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரைக் கெடுப்பது அல்ல. ஆனால் இதுபோன்றவர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே," என்றும் விஷால் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு இயக்குநர் மிஷ்கின் மிக விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.