'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு துல்கர் சல்மானை உற்சாகப்படுத்தி உள்ளது.
இப்படத்துக்காக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்ததாக சொல்கிறார் துல்கர்.
"ஒரு படத்தை உருவாக்க சில ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டி இருக்கும். தேசிங்கு சினிமாவை இதயபூர்வமாக நேசிப்பவர். அதனால் இந்த ஆராய்ச்சியை அவர் தீவிரமாகவும் உண்மையாகவும் செய்துள்ளார்.
"என்னைப் பொறுத்தவரை சினிமா உலகில் உள்ள அனைவருமே நல்ல மனதுக்காரர்கள்தான். தாங்கள் மட்டுமே நன்றாக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. எல்லாரும் எல்லாரையும் பாராட்டுவது நிஜம்," என்கிறார் துல்கர் சல்மான்.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் இவரது ஜோடியாக நடித்திருப்பவர் ரீது வர்மா. தர்ஷன், நிரஞ்சனி, கௌதம் மேனன் உள்ளிட்ட மேலும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"பெரிய எதிர்பார்ப்பு இல்லா மல்தான் இந்தப் படம் வெளியானது. ஆனால், நல்ல சினிமாவுக்குரிய அம்சங்கள் அனைத்தும் இருந்ததால் ரசிகர்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
"அடுத்த பத்து ஆண்டுகளில் தேசிங்கு திரையுலகில் பெரிய ஆளாகிவிடுவார். தர்ஷன் நாயகனாக உருவாகி விடுவார். அதேசமயம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும்கூட இந்தப் படத்தைப் பற்றிப் பேசுவோம் எனத் தோன்றுகிறது.
"ரீது வர்மா சினிமாவுக்காகவே பிறந்தவர் போல் இருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். எல்லாவற்றையும் விட தன் கண்களாலேயே பாதி நடிப்பைக் கொடுக்கிறார்," என்று தன்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களை மனதாரப் பாராட்டுகிறார் துல்கர் சல்மான்.
இதற்கிடையே, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் வசூல் தயாரிப்புத் தரப்பை உற்சாகமடைய வைத்துள்ளது.
எனவே இந்தக் கூட்டணி புதுப் படத்தில் இணைய வாய்ப்புள்ளதாம். அதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியிருப்பதாகத் தகவல்.

