'இதுவும் என் படம்தான்'

'இதுவும் என் படம்தான்'

3 mins read
dec2bb3d-f5a5-4c89-9293-e220e89e7686
தாம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தீவிர ரசிகன் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். -

தாம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தீவிர ரசிகன் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். அவரது இசையில் உருவாகியுள்ள 'பிளான் பண்ணிப் பண்ணனும்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தேறியது.

இந்நிகழ்வில் பேசிய சிவா, தொலைக்காட்சியில் பணியாற்றியபோது தமக்கு சினிமா மேடைகள் கிடைக்குமா என்று வெகுவாக ஏங்கியதாகக் குறிப்பிட்டார்.

"இப்படத்தின் நாயகன் ரியோ மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கு நன்றி. இந்த மேடையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் தொலைக்காட்சி, சினிமா, என இரண்டிலுமே பணியாற்றியவர்கள். அவர்களது வளர்ச்சியைப் பார்ப்பது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது," என்றார் சிவகார்த்திகேயன்.

'அயலான்' படத்தில் நடிகர் பாலசரவணனுடன் இணைந்து பணியாற்றியதாக குறிப்பிட்ட அவர், பாலசரவணன் பேசும் அனைத்துமே மிக சுவாரசியமாக இருக்கும் என்றார்.

"ஒரு மலை மீது படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கிருந்து தப்பி ஓடமுடியாது என்பதால் பாலசரவணனுடன் தொடர்ந்து பத்து நாட்கள் கட்டாயமாகப் பணிபுரிய வேண்டிய சூழல். படப்பிடிப்பு தளத்தில் சரியாக மதியம் ஒன்றரை மணிக்கு மிக ஆர்வமாக இருப்பார். மதிய இடைவேளை என்று இயக்குநர் அறிவித்த உடனேயே, இதைச் சாப்பிடலாமா அதைச் சாப்பிடலாமா என்று கேட்பார். அவரோடு சேர்ந்துதான் நிறைய சாப்பிடக் கற்றுக் கொண்டேன்.

"நடுவில் நானும் அவரைப்போல் குண்டாகத்தான் இருந்தேன். நான் குண்டாக அவர்தான் காரணம். பாலாவின் மதுரை வட்டார மொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்," என்றார் சிவா.

ரோபோ சங்கரைத் தமது அண்ணன் என்று குறிப்பிட்ட அவர், ரோபோ எப்போதும் ஜாலியாக இருப்பார் என்றும், அந்த இயல்பு தமக்கு ரொம்பப் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். விஜய் டிவி புகழ் தங்கதுரையின் நகைச்சுவைகளால் தற்கொலைக்கு முயன்ற பலரில் தாமும் ஒருவன் என்று குறிப்பிட்ட அவர், இதைச் சொல்வதில் பெருமை கொள்வதாக கூறியபோது அரங்கில் பலத்த கைத்தட்டல், சிரிப்பலை.

"ரம்யா நம்பீசன் நல்ல நடிகை. நிறைய படங்களில் நடிக்கிறார், பாடல்கள் பாடுகிறார் என்பதை எல்லாம் கடந்து அவர் நல்ல இயக்குநர் என்பதையும் தெரிந்து கொண்டேன். அண்மையில் அவர் இயக்கிய குறும்படம் என் மனதில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

"சிறந்த படைப்புகள் என்பன யாரிடம் இருந்து வேண்டுமானாலும் எப்போது, எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்பதை ரம்யா நம்பீசனின் குறும்படத்தைப் பார்த்த பிறகு உணர்ந்தேன். கூடிய விரைவில் வெள்ளித்திரை இயக்குநராகவும் ரம்யா நம்பீசன் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்," என்ற சிவா, நடிகர் ரியோவை தமக்கு ரொம்பப் பிடிக்கும் என்றார்.

ரியோ நடிப்பில் இந்தப் படமும் வெற்றி பெறும் என தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், ரியோ சம்பந்தப்பட்ட எந்த விழாவாக இருந்தாலும் அதில் தாம் பங்கேற்பது உறுதி என்றார்.

"ஏனெனில் ரியோ மீது எனக்கு தனிப்பட்ட அக்கறை உள்ளது. நான், திவ்யதர்ஷினி (டிடி), ரியோ ஆகிய மூவருமே பிப்ரவரி 17ஆம் தேதி பிறந்தவர்கள். மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இதை எனது படமாகவே பார்க்கிறேன்," என்றார் சிவகார்த்திகேயன்.

சினிமா என்பது தற்போது மக்கள் வெளிப்படுத்தும் சில வார்த்தைகள் மூலமாகவே பெரியளவில் வெற்றி பெறுகிறது என்று குறிப்பிட்ட அவர், விளம்பரங்களைக் கடந்து ரசிகர்களின் இந்த வார்த்தைகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார்.

தாம் சொல்வது சரியான கருத்து என்பதை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் வெற்றியின் மூலம் உணரலாம் என்றார் சிவா.

நடிகர் ரியோவுக்கு குழந்தை பிறந்திருக்கிறதாம். இதை சிவாவுக்கு முன்னதாகப் பேசிய ரோபோ சங்கர் தெரிவித்தார்.

"இப்படத்தின் தலைப்பை கச்சிதமாகப் பின்பற்றி இருப்பது ரியோ தான். படம் துவங்கும் முன்பு திருமணம் செய்து கொண்டார். இசை வெளியீட்டு விழாவின் போது குழந்தையை ரிலீஸ் செய்துள்ளார். திட்டமிட்டு செயல்பட்ட அவரை அனைவரும் வாழ்த்த வேண்டும்," என்றார் ரோபோ சங்கர்.