'ஜிப்ஸி' நாயகி நடாஷா சிங் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம்.
வளர்ந்து ஆளான பிறகும் ஆசை பெரிதானதே தவிர, குடும்பத்தாரின் அனுமதி மட்டும் கிடைக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தால் நடிக்கலாம் என்று வீட்டார் அனுமதி கொடுத்துள்ளனர்.
"இந்த ஒரு காரணத்துக்காகவே கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்றேன். வீட்டிலும் சினிமாவில் நடிக்க மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர். ஆனால் எங்கே சென்று வாய்ப்பு கேட்க வேண்டும், யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
"சினிமா வாய்ப்புக்காக காத்திருந்த போது தான் விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன.
"மாடலிங் துறையில் எனக்கு பாராட்டுகள் கிடைத்தபோதிலும், எனது துறை என்பது சினிமா தான் என்பதில் தெளிவாக இருந்தேன்," என்று சொல்லும் நடாஷா, கடந்த 2015ஆம் ஆண்டு 'மிஸ் இமாச்சல பிரதேசம்' போட்டியில் அழகிப் பட்டம் பெற்றவர்.
இதையடுத்து வேறு சில அழகிப் போட்டிகளிலும் பட்டங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் தனது மேலாளர் மூலம் 'ஜிப்ஸி' படத்துக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடப்பதாகக் கேள்விப்பட்டாராம். ராஜு முருகன் படம் என்றதும் ஆர்வம் ஏற்படவே, மும்பையில் நடந்த அந்தத் தேர்வில் பங்கேற்றுள்ளார்.
"ராஜு முருகனின் 'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய இரண்டு படங்களையும் பார்த்திருக்கிறேன். அதனால் அவர் எப்படிப்பட்ட கதைகளைக் கையாள்வார், அவற்றை இயக்குவார் என்பதை ஓரளவு யூகித்திருந்தேன்.
"மும்பையிலும் சென்னையிலும் நடிப்பு, ஒப்பனைத் தேர்வு முடிவடைந்த பின் என்னை ஒப்பந்தம் செய்தனர். எனது முதல் படமே தரமான படைப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி," என்கிறார் நடாஷா.
ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிடுபவர், தமிழ் வசனங்கள் பேச சிரமப்பட்டபோது ஜீவா தான் தனக்கு உதவி செய்ததாகச் சொல்கிறார்.
"நான் ஜீவா நடித்த 'நண்பன்', 'கோ' படங்களைப் பார்த்திருக்கிறேன். நான் வடஇந்தியப் பெண். ஆனால் படத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணாக நடித்துள்ளேன்.
"அதனால் எனது உடல் மொழி, பேசும் விதம் என எல்லாவற்றிலும் கச்சிதமாக வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருந்தது. எனது முதல் படம் என்பதால் நன்றாக நடிக்க வேண்டும் என மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
"படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கிறது. குறிப்பாக கமல் சார் என் நடிப்பை பாராட்டிய அந்தத் தருணத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது. அவரது பாராட்டையும், அவரது வார்த்தைகளையும் பொக்கிஷமாக கருதுகிறேன்.
"எனக்குப் பிடித்த நடிகர் கமல். 'விஸ்வரூபம்' படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பது எனக்கே தெரியாது. அந்தளவு அவரது தீவிர ரசிகை.
"என் வீட்டில் யாரும் இன்னும் 'ஜிப்ஸி'யை பார்க்கவில்லை. அநேகமாக அடுத்த சில தினங்களில் பார்த்துவிட்டு விமர்சிப்பதாக கூறியுள்ளனர். அதற்காக காத்திருக்கிறேன். படம் அவர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்," என்று நடாஷா எதிர்பார்ப்புகளுடன் சொல்கிறார்.

