'சூரரைப் போற்று' விரைவில் வெளியீடு காண உள்ள நிலையில் படம் சிறப்பாக வந்திருப்பதாக திருப்தி தெரிவிக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
'இறுதிச்சுற்றின்' மூலம் ரசிகர்களைப் பரவசப்படுத்தியவர் தற்போது சூர்யாவை வைத்து ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்த உள்ளார்.
"எண்ணிக்கையில் இளையர்களை அதிகம் கொண்டிருக்கும் நாடு இந்தியா. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 65 விழுக்காட்டினர் 16 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். எனவே, இந்த இளையர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய, வழிநடத்தக்கூடிய விஷயங்கள், கதைகள் அதிகம் தேவை. அதுபோன்ற ஒரு கதையைத்தான் இந்தப் படத்தில் சொல்லப் போகிறோம்.
"ஒரு கனவோடு, லட்சியத்தோடு வாழும் எவருமே இந்தச் சமுதாயத்துக்கு முன்மாதிரிதான். இந்தப் படத்தின் நாயகனுடைய வாழ்க்கையும் அப்படிப்பட்டது தான். கிராமத்திலிருந்து புறப்பட்டு நகருக்கு வருகிறான் ஒருவன். அவன் பெரிய தொழிலதிபரோ பின்புலம் கொண்டவனோ அல்ல. ஆனால், விமானியாகப் போகிறேன், ஒத்தை ரூபாயில் அனைவரையும் பறக்க வைக்கப் போகிறேன் என்று கனவுகளோடு சொல்கிறான்.
"இந்தக் கதையை எழுதும்போது எனக்கும்கூட ரொம்பப் பிடித்திருந்தது. இது உண்மையாகவே நடந்த ஒன்று. நமக்கு மத்தியில் இருந்த ஒருவர் சாதித்திருக்கிறார். அந்த ஒரு தனி மனிதன் சாதித்ததை நாமும் ஏன் செய்ய முயற்சிக்கக் கூடாது என்று படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் நான் கேட்கிறேன். இதுதான் 'சூரரைப் போற்று'. வேறொன்றுமில்லை," என்று புன்னகைக்கிறார் சுதா கொங்கரா.
இவர் எழுதிக்கொடுத்த 44 பக்க கதைச்சுருக்கத்தைப் படித்த சூர்யா, ஒரே மூச்சில் படித்துப் பார்த்து அதில் நடிக்க விருப்பம் தெரிவித்தாராம். இரவு 11 மணிக்கு கைபேசி குறுந்தகவல் அனுப்பி, இந்தக் கதையை நிச்சயம் திரைப்படமாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாராம்.
"இது பெருந்தொகை செலவிடப்பட்டு எடுக்கப்பட்ட பெரிய படம். விமானம் சம்பந்தப்பட்ட கதை வேறு. இங்கு யாருக்குமே ஒரு விமானத்தின் விலை என்ன என்பது தெரியாது. இரண்டாவது கை மாறினாலே நானூறு கோடியாகும். ஆனால், படநாயகன் விமானப் படையில் இருந்து வெளியேறும்போது ஓய்வூதியமாக 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெறுகிறார். ஆனால், விமான நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு.
"இக்கதையை சுவாரசியமாக சொல்ல வேண்டும். வகுப்பெடுப்பது போல் போரடிக்காமல் சினிமாவாக சொல்ல வேண்டும். அதைத்தான் செய்திருக்கிறோம்," என்று படம் உருவான கதையை விவரிக்கும் சுதா, எழுதிய கதையைப் படமாக்குவது அவ்வளவு சுலபமல்ல என்கிறார்.
56 இடங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். 150 பேர் கொண்ட படக்குழு ஒவ்வோர் இடத்திலும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று வேலையைக் கச்சிதமாக முடிக்க உதவி உள்ளனர். சூர்யாவைப் பொறுத்தவரை படப்பிடிப்பு நடைபெற்ற 60 நாட்களும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்தாராம்.
"தன் மனதின் எந்தப் பகுதியின் ஆழத்துக்குச் சென்று இப்படி ஒரு நடிப்பை எடுத்து வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. நாயகன் தோற்றுப்போவது போன்ற ஒரு சம்பவம் நடக்கும். அப்போது இந்த உலகத்து சோகத்தையெல்லாம் வாரி எடுத்து முகத்தில் கொண்டு வந்து சேர்த்தது போன்று நடித்தார். மொத்த படக்குழுவும் அசந்துபோனது.
"கதைப்படி சூர்யாவின் பெயர் நெடுமாறன் ராஜாங்கம். அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா முரளி. அபர்ணாவைப் பொறுத்தவரை அவரது முகமே கவனத்தை ஈர்க்கும். மிகப் புத்திசாலியான நடிகை. இந்தப் படத்தில் இடம்பெறும் குறிப்பிட்ட ஒரு காட்சியில் சரியாக நடித்தால் போதும் அவரை ஒப்பந்தம் செய்துவிடலாம் என்று நினைத்தோம். அவரோ பிரித்து மேய்ந்துவிட்டார். டப்பிங்கில் மதுரைத் தமிழ் பேசி அசரவைத்தார்.
"இயக்குநரான எனக்கே நடிப்பு பற்றிச் சொல்லிக் கொடுத்த அபர்ணாதான் இந்த ஒட்டுமொத்த உலகத்தில் எனக்குப் பிடித்த நடிகை," என்கிறார் சுதா கொங்கரா.

