கணக்குகள் தவறானதால் நஷ்டம் ஏற்படுத்திய 'தர்பார்'

1 mins read
01f488f7-87dc-4eac-947f-f968be811be4
'பேட்ட' படத்தின் வியாபார அளவை வைத்து 'தர்பார்' படத்தின் உரிமையை விற்றிருந்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்காது, விநியோகிப்பாளர்களும் நஷ்ட ஈடு கேட்டிருக்க மாட்டார்கள் எனத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.  படம்: ஊடகம் -

'பேட்ட' படத்தின் வியாபார அளவை வைத்து 'தர்பார்' படத்தின் உரிமையை விற்றிருந்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்காது, விநியோகிப்பாளர்களும் நஷ்ட ஈடு கேட்டிருக்க மாட்டார்கள் எனத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

எனவே, 'தர்பார்' வியாபாரம் தொடர்பில் தயாரிப்பாளர், விநியோகிப்பாளர்கள் என இருதரப்பிலும் தவறு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்த 'தர்பார்' படத்தால் நஷ்டம் அடைந்ததாக விநியோகஸ்தர்கள் சிலர் புகார் எழுப்பினர். தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினியும் முருகதாசும் ஈடுசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், இந்தக் கோரிக்கையோடு சென்னை வந்த அவர்களை ரஜினியும் முருகதாசும் சந்திக்கவில்லை. இந்நிலையில் ஒரு நடிகரின் முந்தைய படத்தின் வியாபாரமே அடுத்த படத்தின் வியாபார அளவைத் தீர்மானிக்கும் என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

"எத்தனை திரையரங்குகளில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டன என்ற கணக்கு முக்கியம். ஆனால் 'தர்பார்' படத்தைப் பொறுத்தவரை இத்தகைய கணக்குகளில் தவறு செய்துவிட்டனர். சரியாகக் கணக்கிட்டிருந்தால் நஷ்டம் வந்திருக்காது," என்கிறார் ஞானவேல் ராஜா.

'தர்பார்' படத்தால் ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும் தங்களால் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாது என அந்நிறுவனம் கைவிரித்து விட்டதாகவும் தகவல்.