ரசிகர்களைப் போலவே கோடம்பாக்க கலைஞர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் மோதிக்கொள்வது சாதாரணமாகி விட்டது. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி, காயத்ரி ரகுராம் இடையேயான மோதலுக்கு சமூக வலைத்தளங்கள் தயாராகி வருகின்றன.
'மாஸ்டர்' இசை வெளியீட்டில் விஜய் சேதுபதி பேசியதுதான் இந்தப் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அந்நிகழ்வில் பேசிய சேதுபதி கொரோனாவை விட தற்போது இன்னொரு வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்றும், சாமிக்காக எல்லோரும் சண்டை போட்டுக் கொள்வது ஏன் என்று தமக்குப் புரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
"சாமியையே காப்பாற்றக்கூடிய மகா மனிதனை எந்தச் சாமியும் இன்னும் படைக்கவில்லை. சாமியே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். எனவே சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள்," என்றும் சேதுபதி அந்நிகழ்வில் பேசியிருந்தார்.
மேலும், "மதத்தைச் சொல்லி கடவுளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் மதம் கிடையாது," என்றார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
தாம் மனிதனைவிட கடவுளைத்தான் அதிகம் நம்புவதாக அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாழ்க்கை கடவுளால்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு மனிதனின் வெற்றி என்பது கடவுளின் கையில்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இன்னொரு மனிதனை நம்புவதற்கு வாழ்த்துகள் நண்பா. எந்த நம்பிக்கையையும் நம்மால் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கிலான நம்பிக்கையாளர்கள் உள்ளனர். நாங்கள் எல்லாம் ஊமைகள் என்று நினைத்தீர்கள் எனில், மன்னித்து விடுங்கள்.
"இறுதியில் பொய் சொல்லக்கூடிய, வெறுக்கக்கூடிய மற்றொரு மனிதனை நீங்கள் நம்புவதற்காக வருந்துகிறேன். ஒரு மனிதன் மூலம்தான் இன்னொரு மனிதனுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பொய். மனிதனின் வெற்றி கடவுள் கையில்தான் உள்ளது. எனவே, மனிதனைவிட கடவுளை அதிகம் நம்புகிறேன்," என்று காயத்ரி ரகுராம் தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு பதிவிட்டதுமே கோடம்பாக்கத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
சேதுபதிக்குக் கண்டனம் தெரிவித்ததாக தகவல் பரவியது. எனினும் இதற்கு உடனுக்குடன் மறுப்பு தெரிவித்தார் காயத்ரி. தாம் விஜய் சேதுபதியின் பேச்சைக் கண்டிக்கவில்லை என்றும், அனைவரும் சுதந்திரமாகப் பேசுவதுதான் ஜனநாயகம் என்றும் அவர் மற்றொரு பதிவில் குறிப்பிட்டார்.
"நான் சேதுபதியின் கருத்தோடு ஒத்துப் போகவில்லை. அது என்னுடைய சுதந்திரம். அவர் கடவுளை நம்புவதை எல்லோரும் நிறுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. கடவுள் நம்பிக்கையாளர்களை நம்புவதை நிறுத்தவேண்டும் என்றுதான் கூறியுள்ளார். மதச்சார்பின்மை என்ற பேரில் பகுத்தறிவாளர்கள் சேதுபதியின் பேச்சை விரும்புவார்கள்," என்று காயத்ரி குறிப்பிட்டுள்ளார்.

