பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய 'தாராள பிரபு' கொரோனா பீதியால் பாதிக்கப்பட்டுள்ளது.
திடீரென மார்ச் 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூடவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதால் இப்படத்தின் வசூல் குறைந்துபோனது. இந்நிலையில் இப்படம் மீண்டும் வெளியாகும் என பட நாயகன் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 'தாராள பிரபு' படத்துக்கு ரசிகர்கள் அளித்துவந்த போற்றுதலுக்குரிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இன்று உலகையே கொரோனா கிருமித்தொற்று நிலைகுலைய வைத்துள்ளது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் இந்திய அரசும் உலகளவில் பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
"இந்த இக்கட்டான சூழலைக் கடந்தபின் 'தாராள பிரபு' மீண்டும் வெளியாகும். அந்தச் சமயத்திலும் ரசிகர்களின் மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம். அனைவரும் பாதுகாப்பாக இருக்க இறையருள் துணை நிற்கட்டும்," என ஹரிஷ் கல்யாண் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே திரையரங்குகள் மூடப்பட்டதால் மேலும் சில படங்கள் வசூல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கொரோனா விவகாரம் முடிவுக்கு வந்த பிறகு தங்கள் படங்களை மீண்டும் வெளியிட அனுமதிக்க வேண்டுமென அவற்றின் தயாரிப்புத் தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படமும் ஏற்கெனவே அறிவித்தபடி குறித்த தேதியில் வெளியாகுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.