தமிழ் திரையுலக ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வந்திருக்கும் புதிய நாயகி ஷிரின் காஞ்ச்வாலா.
அண்மையில் வெளியான 'வால்டர்' படத்தின் நாயகி. இதற்கு முன்பு 'நெஞ்சமுண்டு நேர்மைஉண்டு ஓடு ராஜா' படத்தில் நடித்திருக்கிறார்.
ஷிரின் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் மும்பையில். தந்தை சொந்தமாகத் தொழில் செய்கிறார். அம்மா இல்லத்தரசி. மூத்த, இளைய சகோதரர்கள் உள்ளனர். பட்டப்படிப்பை முடித்த கையோடு மூன்றாண்டுகள் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றியுள்ளார் ஷிரின். பிறகு விளம்பரப் படங்களில் நடித்தாராம்.
"அப்போது தோழிகள் எல்லாம் சேர்ந்து விளையாட்டாக சில புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்தப் படங்களில் சில இணையத்தில் வைரலாகின. அவற்றைப் பார்த்துவிட்டு சில இயக்குநர்கள் தேடிவந்தனர். இப்படித்தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது," என்கிறார் ஷிரின்.
இவர் அறிமுகமானது கன்னடப் படத்தில். 'விராஜ்' என்ற அந்தப் படம் நல்ல வசூல் கண்டதாம். அதன் பிறகு சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' பட வாய்ப்பு தேடிவந்துள்ளது. இதில் தொலைக்காட்சி நிருபராக நடித்த வகையில் ஷிரினுக்கு கோடம்பாக்கத்தில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. தற்போது அன்பு இயக்கத்தில் 'வால்டர்' படம் வெளியாகி உள்ளது.
"சிபிராஜ் காவல்துறை அதிகாரியாகவும், நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பெண்ணாகவும் நடித்துள்ளேன். எங்கள் இருவருக்கும் இடையே மலரும் காதல், சில பிரச்சினைகள் என்று வித்தியாசமான கதைக்களம்.
"என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் நடராஜ் என்ற நட்டி, சிபிராஜ், சமுத்திரகனி என்று நல்ல அனுபவம் வாய்ந்தவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுமுகமாகக் கருதாமல் நட்பாகப் பழகினர். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்," என்று சொல்லும் ஷிரின், அடுத்து சந்தானத்துடன் 'டிக்கிலோனா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் விமலுடன் 'மஞ்சள் குடை' படத்தில் நடிக்க உள்ளாராம். இவை தவிர, மேலும் இரண்டு படங்களைக் கைவசம் வைத்துள்ளார். அவை குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்.
வரிசையாக பல படங்களில் நடிக்கவேண்டும், லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் ஷிரினுக்கு எந்த ஆசையும் இல்லை. சில படங்களில் நடித்தாலும் நல்ல நடிகை என்று பெயரெடுப்பது மட்டுமே தனது லட்சியம் என்கிறார்.
"குறிப்பாக, கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதைகளில் நடிக்க விரும்புகிறேன். நயன்தாரா, ஜோதிகா ஆகியோர் இப்படி ஒரு முடிவை எடுத்து தைரியமாகச் செயல்படுத்தி வருகிறார்கள். ஆனால், நான் இப்போதுதான் நடிக்கத் துவங்கி உள்ளேன்.
"எனவே, நிபந்தனை எல்லாம் விதிக்க முடியாது. எனினும் அவர்களைப் போல் நடிக்கவேண்டும் என்பதை மனதில் வைத்திருந்து சாதிக்க முயற்சி செய்வேன்," என்று சொல்லும் ஷிரினுக்கு, இந்தி நடிகை கரீனா கபூரை ரொம்பப் பிடிக்குமாம். நடிகர்களில் சல்மான்கான் ரசிகையாம். தமிழில் 'நயன்தாராதான் என் உயிர்' என்கிறார்.
எப்போதும் பளிச் என்று காட்சி தருவதன் ரகசியம் என்ன?
"பெரிதாக ஒன்றுமில்லை. நான் அணியும் ஜிமிக்கி கம்மல்தான் அந்த ரகசியம். இதை அணிவது என்றால் ரொம்பப் பிடிக்கும். எப்போதுமே இதை அணிந்திருக்க வேண்டும் என விரும்புவேன். வளையல், நெக்லஸ் போன்றவற்றில் பெரிதாக விருப்பமில்லை.
"அதேபோல் உடை என்று எடுத்துக் கொண்டால் புடவைதான் பிடித்தமான தேர்வு. திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும் புடவைக்குத்தான் முன்னுரிமை. அதற்காக மற்ற உடைகள் பிடிக்காது என்று அர்த்தமில்லை. மேல் சட்டை, ஜீன்ஸ் போன்றவையும் பிடிக்கும்.
"என்னைப் பொறுத்தவரை ஆள் பாதி ஆடை பாதி என்பேன். இதை மறக்காமல் இருந்தால், பெண்கள் எப்போதுமே அழகாகக் காட்சி தரமுடியும்," என்கிறார் இளம் நாயகி ஷிரின்.

