சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார். முன்னதாக அவர் நடிகர் சித்தார்த்தை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் பிரிந்தனர். இந்நிலையில் தன் கணவர் பற்றியும் முன்னாள் காதலரான சித்தார்த் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார் சமந்தா.
"நடிகை சாவித்திரி போன்று நானும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பேன். ஆனால் நல்ல வேளையாக நான் ஆரம்பத்திலேயே சுதாரித்துக்கொண்டு அந்த உறவில் இருந்து வெளியேறிவிட்டேன். அந்த காதல் எனக்கு நல்லது அல்ல என்பதை உணர்ந்த பிறகே பிரிந்தேன். என் வாழ்வில் நாக சைதன்யா வந்ததற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்," என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
திருமணமாகி இத்தனை ஆண்டுகளாக சித்தார்த் பற்றி பேசாத சமந்தா தற்போது ஏன் பேசவேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமந்தா தனது திரை வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவதற்காக அவர் படத்தில் அதிக கவர்ச்சியுடன் நடித்தது ஒரு காரணம். அதற்கு சித்தார்த் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது என்று காரணம் கூறப்பட்டது. சமந்தாவை பிரிந்த பிறகு சித்தார்த் இன்றுவரை தனியாகத்தான் இருக்கிறார்.
"திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வித்தியாசமான உடைகளைத்தான் நான் அணிந்து செல்வேன். அதை வைத்து, சமூக வலைத்தளம் மூலம் என்னைப் பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர். அதுதான் எனக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தியது.
"திருமணத்துக்குப் பின், ஒரு நிகழ்ச்சிக்கு நான் நாகரிகமான உடை அணிந்து சென்றேன்.அப்போது, என்னுடைய உடை குறித்து சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. அது எனக்கு மிகப் பெரிய சங்கடத்தை அளித்தது. ஆனாலும் அடுத்த முறையும் கவலைப்படாமல் முன்பு உடுத்தியது போலவே உடை அணிந்து சென்றேன்.
"ஆனால், இரண்டாவது முறை அப்படி சென்றபோது, முதல் முறை இருந்த அளவுக்கு கடுமையான விமர்சனங்கள் எதுவும் எழவில்லை. ஆக, உடை விஷயத்தில்கூட, எல்லோரையும் நாம் பழக்கப்படுத்த வேண்டியிருக்கிறது.
"எல்லா விஷயத்துக்கும் முதல் அடிதான் முக்கியம். அதற்காக நான் துணிச்சலான செயலை செய்துவிட்டதாகச் சொல்லவில்லை. உடை அணியும் விஷயம் ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்கிறபோது, அடுத்தவர் ஏன் அதில் மூக்கை நுழைக்கின்றனர் என்று புரியவில்லை. இருந்தாலும் அது குறித்தெல்லாம் பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை என்பதுதான் என்னுடைய அனுபவம். திருமணம் ஆகிவிட்டால் இப்படித்தான் உடை அணியவேண்டும் என்ற கோட்பாடுகளையெல்லாம் தூக்கி எறிய வேண்டும்," என்று மனம் திறந்து பேசினார் சமந்தா.

