அமலா பாலுக்குத் திருமணமாகி விட்டது என்று வெளியான செய்தி கோடம்பாக்க வட்டாரங்களில் கடந்த இரு தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து எந்த நேரத்திலும் திருமண வரவேற்பு குறித்த அறிவிப்பும் அழைப்பிதழும் வரும் என்று சக கலைஞர்கள் காத்திருந்தனர். ஆனால், அழைப்பிதழுக்குப் பதிலாக மறுப்புச் செய்திதான் வெளிவந்திருக்கிறது. அமலாபாலுக்கு மறுமணமாகிவிட்டதாகக் கூறப்படுவது உண்மையல்லவாம். இதுகுறித்து அமலா விரைவில் விளக்கமளிக்க உள்ளாராம்.
இந்திப் பாடகர் பவ்னிந்தர் சிங்கும் அமலாவும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காதலிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துவிட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பவ்னிந்தர் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டார். திருமண வைபவத்தின்போது அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் கருதிய நிலையில் அது தொடர்பான பதிவை நீக்கிவிட்டார் பவ்னிந்தர் சிங்.
மேலும் அடுத்த சில மணி நேரங்களில் தமது சமூக வலைத்தளப் பக்கத்தையே அவர் முடக்கி விட்டார். இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த பலரும் அமலாவுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். எனவே, அமலாபால் தரப்பிலிருந்து திருமணம் நடக்கவில்லை என முதற்கட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. "இந்தத் திருமணம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல. பவ்னிந்தர் எதற்காக திருமணம் நடந்தது போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்தார் என்பது தெரியவில்லை. இவை அனைத்தும் மும்பையில் நடந்த ஒரு தனியார் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். "திருமணம் என்பது அமலாபாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவிவரும் செய்திக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை," என்று அமலா பாலின் மேலாளர் சில தமிழக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

