கொரோனா தாக்கத்தால் படப்பிடிப்புகள் ரத்தாகி திரையுலகக் கலைஞர்கள் வீட்டிலேயே பொழுதைக் கழிக்க நேரிட்டுள்ளது. வெளிநாடு செல்வதற்கும் அச்சப்படுவதால் எல்லோருமே வீட்டில்தான் முடங்கி உள்ளனர். இது குடும்பத்துக்கான நேரம் என்பதை உணர்்்ந்துள்ளதாகச் சொல்கின்றனர்.
கட்டாயத் தனிமைப்படுத்தலில் உள்ள இவர்கள் எப்படி பொழுதைக் கழிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
நாள் முழுக்க தொலைக்காட்சியில் வரக்கூடிய கொரோனா கிருமி குறித்த செய்திகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை வாணி போஜன்.
தன் வீட்டில் வேலைக்கு வரும் பணியாளர்கள், காய்கறி விற்கும் அண்ணன், பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்று தாம் பார்க்கும் அனைவரிடமும் கிருமித் தொற்று குறித்து புரியும் வகையில் விளக்குகிறாராம்.
"ஆனால் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை. ஏன் எல்லோரிடமும் பீதி கிளப்புகிறாய் என்று ஏசுகிறார். பீதிக்கும் விழிப்புணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை அவருக்குப் புரிய வைத்துள்ளேன். இந்தப் பணியை அனைவரும் செய்ய வேண்டும்," என்கிறார் வாணி போஜன்.
நாம் மட்டும் விழிப்பாக இருந்தால் போதாது என்றும் சுற்றி இருப்பவர்களும் சுத்தமாக, பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார் பிரியா ஆனந்த். தாத்தா, பாட்டியோடு நேரம் செலவிட கிடைத்திருக்கும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
"கொரோனா கிருமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கைபேசிகள், இணையம், சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அவற்றின் வழி நம்மை வந்து சேரும் நல்ல தகவல்கள், படங்கள் வேடிக்கையான காணொளிப் பதிவுகள் இந்தச் சமயத்தில் நமக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன.
"இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் கிடைத்த ஓய்வை எனக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறேன்," என்கிறார் பிரியா ஆனந்த்.
நடிகை ஷ்ருதி ஹாசன், அவரது சகோதரி அக்ஷரா, தந்தை கமல், தாய் சரிகா ஆகிய நால்வரும் நான்கு வெவ்வேறு இடங்களில் தங்களை சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டு நாட்களைக் கடத்துகிறார்களாம். தனிமையில் தங்கியிருப்பது தனக்கொன்றும் புதிதல்ல என்கிறார் ஷ்ருதி.
"அண்மையில்தான் லண்டனில் இருந்து திரும்பினேன். அம்மா மும்பையிலும் அப்பாவும் அக்ஷராவும் சென்னையில் வெவ்வேறு வீடுகளிலும் தனியாக உள்ளனர். நானும் மும்பையில் தனியே உள்ளேன். எங்கள் நால்வருக்கும் வெவ்வேறு பயணத் திட்டம் இருப்பதால் ஒரே இடத்தில் தனிமைக்குள்ளாகி வசிப்பதில் அர்த்தமில்லை எனக் கருதினோம். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் இதுபோன்று முடிவெடுப்பது நல்லது," என்கிறார் ஷ்ருதி.
இப்படி ஒரு சூழல் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என்கிறார் அருண் விஜய். நாம் எந்தளவு பாதுகாப்பாக இருக்கிறோமோ அதுதான் பிறருக்கு நாம் கொடுக்கும் பாதுகாப்பு எனக் கருதுவதாகவும் சொல்கிறார்.
"உடற்பயிற்சிக் கூடங்களை மூடிவிட்டதால் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறேன். குடும்பத்தோடு அதிக நேரத்தைச் செலவிடுவதற்கான நல்ல வாய்ப்பாக இதைக் கருதுகிறேன். எல்லோருடைய வீட்டிலும் முதியவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு," என்கிறார் அருண் விஜய்.
கிருமித் தொற்று பயத்தால் அடிக்கடி கைகளைக் கழுவுகிறாராம் விவேக்.
"பொதுவாகவே இந்திய மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு குறைவு. சிலர் குப்பைகள் குவிந்திருக்கும் இடத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் அங்கேயே வாழவும் செய்கிறார்கள்.
"தூசுப்பட்ட மெதுவடையை தேநீர்க்கடையில் நின்று சாப்பிட்டபடி பேசுகிறார்கள். கொரோனா கிருமி குறித்து அச்சப்படத் தேவையில்லை. அதேசமயம் அலட்சியமும் கூடாது. நான் வீட்டில் இப்போது அதிக புத்தகங்கள் படிக்கிறேன். நான் இயக்கும் படத்துக்கான கதையை எழுதுவதிலும் கவனம் செலுத்துவேன். சில நகைச்சுவைக் கதாபாத்திரங்களை எப்படி மெருகேற்றலாம் என்பது குறித்தும் யோசித்து வருகிறேன்," என்கிறார் விவேக்.
இயக்குநர் சுசீந்திரன் இந்தக் கட்டாய ஓய்வைப் பயன்படுத்தி குடும்பத்துடன் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்துக்கு வந்துவிட்டாராம். வீடு, தோட்டம் என்று வலம் வருபவர் வெளியே எங்கேயும் செல்வதில்லை.
"நம் மண், நம் தோட்டம். அவை இரண்டும் நம்மைப் பாதுகாக்கும். தங்கை வீட்டார் குடும்பத்துடன் வந்திருக்கிறார்கள்.
"நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லோரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக நாட்களைக் கடத்துகிறோம்," என்கிறார் சுசீந்திரன்.

