கொரோனா கிருமி பாதிப்பின் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருப்பதால் வறுமையில் வாடும் சினிமா தொழிலாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி செய்யவேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து நடிகர்கள் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சமும் சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து ரூ. 10 லட்சமும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் தலா ரூ.10 லட்சமும் தனுஷ் ரூ.15 லட்சமும் என தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதி கொடுத்துள்ளார்.
நடிகை ரோஜா தனது சார்பில் 150 அரிசி மூட்டைகளை பெப்சிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேசும் தனது சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதி அளிப்பதில் டோலிவுட் நடிகர்களும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் பிரதமர் நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயும் ஆந்திரா, தெலுங்கானா முதல்வர் நிதிக்காக தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் கொரோனா நிவாரண நிதியாக 2 கோடி ரூபாய் கொடுத்து பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
பவன் கல்யாணைத் தொடர்ந்து டோலிவுட்டின் இளம் நடிகர்களான ராம் சரண் 70 லட்சம் ரூபாயும் மகேஷ் பாபு ஒரு கோடி ரூபாயும் அல்லு அர்ஜுன் 1.25 கோடி ரூபாயும் கொரோனா கிருமிக்கு எதிராகப் போராடி வரும் ஆந்திரா, தெலுங்கானா அரசின் நிவாரண நிதிக்காக வழங்கி உள்ளனர்.
இந்நிலையில், மற்ற டோலிவுட் நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் பிரபாஸ், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியும் ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசின் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சமும் கொடுத்துள்ளார். பாகுபலி நடிகரின் இந்த பரந்த மனதை அவரது ரசிகர்கள் மட்டுமின்றிமக்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவிலேயே கொரோனா கிருமி பாதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம்தான். ஆனால், மோகன் லால், மம்முட்டி, பிருத்விராஜ், துல்கர் சல்மான், நிவின் பாலி உள்ளிட்டோர் எந்த ஒரு நிதியுதவியும் அளித்தது போன்ற தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

