கொரோனா கிருமித் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் 21 நாட்களும் வீட்டில் எப்படி பொழுதைக் கழிக்கலாம் என்பது குறித்தே பெரும்பாலான திரைக்கலைஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கும் சமூகத்துக்கும் எவ்வாறு முடிந்த உதவிகளைச் செய்யலாம் என்பது குறித்தும் சிலர் யோசிப்பது நல்ல விஷயம்.
அந்த வகையில் நடிகை சம்யுக்தா தினந்தோறும் ஆதரவின்றிப் பல்வேறு நகரங்களில் சுற்றித் திரியும் தெருநாய்கள் குறித்து கவலைப்படுகிறார். இப்படி கவலைப்படுவதோடு நிற்காமல், அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து அதைச் செயல்படுத்தி வருகிறார்.
கடந்த ஒரு வார காலமாக நாய்கள் உணவின்றிப் போராடி வருவதைக் கண்டு மனமுடைந்து போனதாக தமது சமூகவலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நானும் நல்ல மனம் கொண்ட சிலரும் சேர்ந்து பெங்களூருவில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கணக்கெடுத்து அவற்றுக்கு உணவளித்து வருகிறோம். இதற்கு பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறார்.
"பொதுமக்கள் தங்களைப் பாதுகாப்பதுடன் இத்தகைய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என தமது பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தச் சேவையைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். நடிகை மஞ்சு வாரியர் கேரளாவில் ஊரடங்கால் கஷ்டப்படும் திருநங்கைகள் குறித்து கவலை கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு திருநங்கைகளின் வீட்டுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளாராம்.
இதுகுறித்து மஞ்சு வாரியர் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், கொச்சியைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருநங்கைகளுக்கான அமைப்பின் தலைவியும் ஒப்பனைக் கலைஞருமான ரெஞ்சு ரெஞ்சிமர் இதுபற்றிய விவரம் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகள் எந்த வேலையும் பணமும் இன்றி மிகுந்த சிரமத்தில் இருப்பதாக மஞ்சுவைத் தொடர்பு கொண்டு சொன்ன மறுதினமே அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்தாராம். அவற்றைத் தங்கள் அமைப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு விநியோகித்ததாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரெஞ்சு ரெஞ்சிமர்.
நடிகர் விமல் தமது சொந்த ஊரில் கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் விமல்.
இங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்ளப் போவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையறிந்த விமல் உடனடியாக சொந்த ஊருக்கு விரைந்தார். அங்குள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு தெருவாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்.
மேலும் கண்ணில் பட்ட ஊர் மக்கள் அனைவரிடமும் சமூக விலகல் குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டார். சினிமாவில் மட்டுமே நடிக்காமல் நிஜ வாழ்க்கையிலும் களப்பணியில் ஈடுபட்ட அவரைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

