தேவையின்றி தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில்சொல்ல விரும்பவில்லை என்கிறார் நடிகை பூர்ணா. தாம் ஒருவரைக் காதலித்ததாகவும் அந்தக் காதல் கைகூடவில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் மனம் திறந்துள்ளார்.
நாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான பூர்ணாவுக்கு தொடக்கத்தில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும் சில படங்களின் தோல்வியால் மிளிர முடியவில்லை.
இதையடுத்து சில காலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தவர் பின்னர் நாயகியாக இல்லாவிட்டாலும் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் தோன்றினார். மேலும் எதிர்மறை வேடங்களிலும் இவரை திரையில் காண முடிந்தது. 'சவரக்கத்தி' படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார் பூர்ணா. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் சசிகலாவாக பூர்ணாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் திரைத்துறைக்கு வந்த பிறகே தாம் அதிகமாக விமர்சிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் பூர்ணா.
"என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் அதைவிட ஒரு குழந்தையை கூடுதலாக பெற்று, ஆறு பேருக்கு அம்மாவாக விரும்புகிறேன். ஏனெனில் கர்ப்பம், பிரசவம் போன்றவற்றை நான் ரசித்து அனுபவிக்க விரும்புகிறேன்.
"என்னுடைய தாயார், சகோதரர்கள் நால்வரையும் வசதியான மருத்துவமனைகளில் தான் பிரசவித்திருக்கிறார். நான் மட்டும் ஆரம்ப சுகாதார மையத்தில் பிறந்திருக்கிறேன்.
"கிராமங்களில் பிரசவத்திற்காகவே ஒரு அறையைகட்டி வைத்திருப்பார்கள். நான் பிறந்த அந்த அறை இப்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கிறது. அந்த பகுதிக்குச் செல்லும்போது என் தாயார் அதை சுட்டிக்காட்டி, 'பெரிய நடிகையான பூர்ணா இந்த நட்சத்திர தங்குவிடுதி போன்ற அறையில்தான் பிறந்தார்' என்று சிரித்தபடி சொல்வார்," என்கிறார் பூர்ணா.
மகள் சிறந்த நடிகையாக வேண்டும், புகழ்பெற வேண்டும் என்று பூர்ணாவின் தாய் மிகவும் விரும்பினாராம். இதற்காக மகளை நடனம் கற்க வைத்துள்ளார்.
சிறு வயதில் கோவில்களிலும் பிற வழிபாட்டு தலங்களிலும் நடனம் ஆடியுள்ளார் பூர்ணா. இதனால் அதிகம் விமர்சிக்கப்பட்டாராம்.
"திரைத் துறைக்கு வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் சார்ந்திருக்கும் மதத்தில் அதிக நம்பிக்கை கொண்டவள். நினைவு தெரிந்த நாளில் இருந்து எல்லா புண்ணிய நாட்களிலும் நோன்பு இருந்திருக்கிறேன்.
"இது தெரியாமல் சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். அதை நான் பொருட்படுத்துவதில்லை. அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கவும் நான் விரும்பவில்லை. ஏனெனில் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருந்தால் அதற்கு முற்றுப்புள்ளியே வைக்க முடியாது.
"எனவே நான் அனைத்துவிதமான விமர்சனங்களையும் கடந்து செல்லவே விரும்புகிறேன். என்னுடைய இந்தப் போக்கு குறித்தும் விமர்சிக்கப்படுவேன் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன்," என்கிறார் பூர்ணா.
இவரும் ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்டுள்ளார். ஆனால் சில விஷயங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாததால் அந்தக் காதல் கைகூடாமல் போய்விட்டதாம்.
இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்று சொல்லும் பூர்ணா, அந்தக் கடந்த கால காதலை மிகவும் மதிப்பதாகச் சொல்கிறார்.
"எனக்கும் ஒரு காதல் இருந்தது. ஆனால் இருவருமே ஒருவருக்கொருவர் வலியைத் தராமல் பிரிந்துவிட்டோம். அந்தக் காதலைப் பற்றி என் குடும்பத்தினருக்கும் எனக்கு நெருக்கமானவர்களுக்கும் நன்கு தெரியும்.
"வீட்டில் எல்லோரது சம்மதத்துடனும் என் திருமணம் நடக்கவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஆனால் அந்தக் காதலில் அது நடக்காது என்பதை எங்களால் உணர முடிந்தது. அதனால் தான் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட போதிலும் வாழ்க்கையில் இணையாமல் பிரிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது," என்கிறார் பூர்ணா. 'தலைவி' படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என்றும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் இந்தப் படம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தாம் நம்புவதாகச் சொல்கிறார் பூர்ணா.

