கொரோனா கிருமி மதச்சார்பற்றது என்று நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா கிருமி மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனா கிருமி சமத்துவத்தை நம்புவதாகவும், இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ராஷி கண்ணா மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் இத்தகைய விமர்சனங்களையும் குறை கூறலையும் தவிர்க்க வேண்டும் என ராஷி கண்ணா வலியுறுத்தி உள்ளார்.
"99.99 விழுக்காடு இந்துக்கள் கோமியம் அருந்துவதில்லை. கொரோனா கிருமித் தொற்றிலிருந்து கோமியம் பாதுகாக்கும் என்றோ நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் என்றோ அவர்கள் நம்புவதும் இல்லை. அதேபோல் டெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்வை 99.99 விழுக்காடு இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை. அந்த நிகழ்வில் கூறப்பட்டதையும் ஏற்கவில்லை. கொரோனா கிருமி சாதி, மதம், செல்வம், அந்தஸ்து என எதையும் பார்க்காமல் தொடர்பில் உள்ள யாராக இருந்தாலும் அவர்களைப் பாதித்துக் கொல்கிறது," என ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
இத்தருணத்தில் ஒருவரையொருவர் குற்றம் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், கொரோனா கிருமிக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே கேள்விகள் கேட்கவோ எதிர்ப்புத் தெரிவிக்கவோ இது உகந்த நேரமல்ல. என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஒரு பிரச்சினையைக் கண்டுபிடிப்பது அனைவருக்கும் எளிதான விஷயம் என்றும் அதற்கான தீர்வைக் கண்டுபிடிப்பதுதான் சிரமம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா போன்ற நாட்டில் 134 கோடி மக்களைப் பாதுகாக்க ஒரே ஒருவர்தான் இருக்கிறார் என்றும் அவர் பிரதமர் மோடிஜி தான் என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
"கேள்விகள் கேட்கலாம்; எதிர்ப்பும் தெரிவிக்கலாம். ஆனால், இது அதற்கான நேரமல்ல. அதற்கான நேரம் பின்னர் வரும்.
"இந்தத் தருணத்தில் அனைவரும் ஒன்றாக இணைவோம். ஏனெனில் அனைவரும் ஒருங்கிணைந்துதான் கொரோனா கிருமிக்கு எதிராக சண்டையிட முடியும்," என்று வரலட்சுமி கூறியுள்ளார்.
தற்போது பிரதமர் மோடியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தாம் பிரதமருடன் கைகோர்த்திருப்பதாக கூறியுள்ளார்.
பிரதமர் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் தற்போது மேற்கொண்டுள்ள பணி எந்தளவு கடுமையானது என்பது தமக்குப் புரியும் என்றும் வரலட்சுமி அந்தக் காணொளிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இத்தாலி நாட்டுக்கு ஏற்பட்ட நிலைமை இந்தியாவுக்கும் ஏற்படவேண்டுமா? நடிகை மீனா கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், ஊரடங்கு உத்தரவை விளையாட்டாகக் கருதிக்கொண்டு பலர் வெளியே சுற்றித் திரிவது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
"வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்தது இந்த உலகத்தையே காப்பாற்றும் வாய்ப்பு அடிக்கடி அனைவருக்கும் கிடைக்காது. நகைச்சுவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நீங்கள் கவனமாக இருந்தால் தான் உங்கள் குடும்பம் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ள மீனா, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்திருப்பதால், 3 மொழிகளிலுமே விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டுள்ளார் மீனா.

