கொரோனா கிருமித் தொற்று ஒழியவேண்டும் என ஆளாளுக்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் கொரோனாவுக்குப் பிறகான காலம் குறித்தும் சிலர் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் நடிகை ஆன்ட்ரியா தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான காலம் குறித்து நமது பேரக்குழந்தைகளிடம் விவரம் சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்தப் பித்து பிடிக்கும் சூழலை எப்படிக் கையாண்டோம் என்பதே நமது பேரக்குழந்தைகள் கேட்க விரும்பும் கதையாக இருக்கும் என சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நமது வேலைகள், வழக்கமான காலை நடைப்பயிற்சி, நீண்டதூரப் பயணம், பிடித்த உணவகங்களில் உணவு, பிறந்தநாள் விழாக்கள், வீட்டுக் கொண்டாட்டங்கள், சுற்றுலா மற்றும் நமது உயிர்கள் என அனைத்துக்கும் அச்சுறுத்தல் நிலவும் காலம் இது.
"நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம் குறித்து என்றேனும் ஒருநாள் நமது பேரக் குழந்தைகளிடம் விவரம் சொல்வோம்," என ஆன்ட்ரியா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு குழப்பத்துக்கும் மத்தியில் தனிமையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக நல்லறிவைத் தேர்ந்தெடுத்தோமா? பொறாமையை விடுத்து பச்சாதாபத்தைத் தேர்வு செய்தோமா? பேராசையை விடுத்து பெருந்தன்மையின் பக்கம் நின்றோமா? என்பதே முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய சூழ்நிலையில் நம்மால் இரண்டு விஷயங்களை செய்ய முடியும் எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.
"ஒன்று கற்பனையாக, நம் அனுபவத்தைச் சொல்லலாம். அல்லது வாழ்ந்து காட்டலாம். வீட்டிலிருந்தோம், சமூக ஊடகங்களால் சோர்வுற்றோம், சலித்துப் போய் படைப்பாற்றலோடு இருந்தோம், பால்கனிகளில் நின்று வெளியே சேவை செய்து கொண்டிருப்பவர்களுக்காக பாடல் பாடினோம், கைதட்டினோம் என்று பேரக்குழந்தைகளிடம் நாம் சொல்லலாம்.
"ஒரு புதிய நாளைப் பார்க்க நாம் உயிர் பிழைத்தோம் என்று இந்தக் கதையைச் சொல்லாதீர்கள்," என்று ஆன்ட்ரியா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலும் தமது சமூக வலைத்தளப் பதிவில் கொரோனா கிருமித் தொற்று ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு என்னவெல்லாம் செய்யலாம் என தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உணவகங்களில் சாப்பிடலாம், இந்தியாவில் விளையும் காய்கறி, மற்றும் பழங்களை மட்டுமே வாங்கலாம். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடை மற்றும் காலணிகளை வாங்கி அணியலாம் என அவர் பட்டியலிட்டுள்ளார்.
இத்தகைய செயல்பாடு உள்ளூர் வணிகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவினால் நாடு மென்மேலும் வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.
விடுமுறைகளை உள்நாட்டிலேயே கழிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், சக மனிதர்களின் உதவியின்றி நாட்டிலுள்ள வியாபாரிகள் மீண்டும் எழுந்து நிற்க சிரமப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
"கொரோனா கிருமித் தொற்று பரவல் முடிவுக்கு வரும்போது, அதன் அழிவில் நமக்கான ஆபத்தும் முடிவுக்கு வரும். அப்போது நாட்டு நலனுக்காக நாம் அனைவரும் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும்," என்று காஜல் தமது சமூக வலைத்தளப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் ரகுல் பிரீத் சிங், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட மேலும் பல முன்னணி நாயகிகள் கொரோனா கிருமித் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் அடுத்த தலைமுறைக்கு இத்தகைய கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பெரியவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியம் என இளம் நாயகிகள் கூறியுள்ளனர்.
இதே போல் முன்னணி நடிகர்கள் பலரும் இதுபோன்ற கருத்துகளை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

