கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு காரணமாக 'மாஸ்டர்' படத்தின் வெளியீடு தள்ளிப்போய் இருக்கிறது.
இதனால் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த படக்குழுவும் சோகத்தில் மூழ்கி யுள்ளது.
இந்நிலையில் கொரோனா கிருமி பாதிப்பு தலைதூக்கி இருக்காவிட்டால் 'மாஸ்டர்' படம் இந்நேரம் வெளியாகி இருக்கும் என்றும் ரசிகர்கள் அதைக் கொண்டாடி இருப்பார்கள் என்றும் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
இவர் அமலா பால் நடித்த 'ஆடை' படத்தை இயக்கியவர். 'மாஸ்டர்' படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
"மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றபோது காற்று மாசு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. அதன்பின்னர் சில போராட்டங்கள் நிகழ்ந்தன. அதையடுத்து வருமான வரித்துறை சோதனை.
"இப்போது கொரோனா கிருமித் தொற்று. ஒரு ரசிகனாக இது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது," என்று தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரத்னகுமார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது 'மாஸ்டர்' படம். ஏப்ரல் 9ஆம் தேதி (நேற்று) இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
விஜய்யின் 64ஆவது படமான இதில் அவரது ஜோடியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
மேலும் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன், அர்ஜுன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய் அரசியல் ரீதியில் சில கருத்துகளை முன்வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசியல் களத்திலும் இந்தப் படம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

