'வால்டர்' படத்தில் நாயகியாக நடித்த ஷிரின் காஞ்ச்வாலா அடுத்து சந்தானம், விமல் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
மும்பை பெண்ணான இவர் கொரோனா கிருமி பீதியால் வீட்டில் முடங்கி இருப்பது எரிச்சலூட்டுகிறது என்கிறார்.
வழக்கமாக விடுமுறை கிடைத்தால் துபாய் சென்றுவிடுவாராம். இவரது மூத்த சகோதரர் அங்குதான் உள்ளார். ஒரே தம்பியுடன் மும்பை வீட்டில் பெற்றோருடன் வசிக்கிறார்.
ஷிரின் காஞ்ச்வாலா படிப்பில் ரொம்ப சுட்டி. 12ஆம் வகுப்பில் 89 விழுக்காடும் கல்லூரியில் 90 விழுக்காடும் என மதிப்பெண்களை வாங்கிக் குவித்தாராம்.
மும்பையில் படித்து முடித்த கையோடு தனியார் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மூன்று வருட பணிக்காலத்தில் கிட்டத்தட்ட உலகையே சுற்றி வந்துவிட்டதாகச் சொல்கிறார்.
"விமானப் பணிப்பெண்ணாக இருந்தபோது விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் சினிமாவுக்குள் நுழைந்து விட்டேன். கன்னடத்தில் அறிமுகமாகி பிறகு சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' மூலம் நான் கோடம்பாக்கத்துக்குள் வந்த கதையெல்லாம் ரசிகர்களுக்கு நன்கு தெரியும்.
"'வால்டர்' படத்துக்குப் பிறகு எனது மதிப்பு அதிகரித்துள்ளதாக நம்புகிறேன். தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று மட்டுமே தற்போது எனது இலக்கு," என்கிறார் ஷிரின்.
நள்ளிரவு விருந்து நிகழ்வுகளில் பங்கேற்பது, டேட்டிங் செய்வது போன்றவற்றில் தனக்கு அறவே ஆர்வம் இல்லை என்று சொல்பவர் இதுவரை எந்தவொரு விருந்து நிகழ்வுகளி லும் தலைகாட்டியதே இல்லையாம். தவிர, தனது தந்தையும் மூத்த சகோதரரும் மிகவும் கண்டிப்பானவர்கள் என்கிறார்.
"மும்பை பெண் என்பதால் என்னைப் பற்றி சிலர் தப்புக்கணக்கு போடுகிறார்கள்.
"மும்பையில் வேண்டுமானால் விருந்து நிகழ்வுகளில் பங்கேற்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் என் வீட்டில் அதற்கு அனுமதி இல்லை.
"அதேசமயம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறேன். என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு அதுதான்," என்று சொல்லும் ஷிரின் எப்போதுமே கைபேசியுடன்தான் காணப்படுகிறார்.
கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவிடுகிறார். தற்போது இவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் நூற்றுக்கணக்கான தமிழ் சினிமா ரசிகர்கள் பின் தொடர்கிறார்களாம். அவர்களில் பலரும் தம்மைப் பாராட்டுவது உற்சாகமளிப்பதாகச் சொல்கிறார்.
"ரசிகர்களுடன் தொடர்ந்து கலந்துரையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனினும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதிலளிக்க முடியவில்லை. அதேசமயம் அவ்வப்போது செல்ஃபி படங்கள் எடுத்து வெளியிடுவது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
"தங்களுடன் நேரடியாக உரையாட முடியாவிட்டாலும் இவ்வாறு படங்களையேனும் வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கிறார்கள். அந்தளவு அன்பான ரசிகர்கள் கிடைத்திருப்பது பெரிய விஷயம் எனக் கருதுகிறேன்," என்கிறார் ஷிரின்
வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்கவேண்டும் எனும் ஆசை இருந்தாலும் தற்போதைக்கு திரையுலகில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதுதான் முதற்கட்ட திட்டம் என்று குறிப்பிடுபவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஜனரஞ்சகமான கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகச் சொல்கிறார்.
"அதற்காக இரண்டு டூயட் பாடல்களில் வலம் வந்து ஒன்றிரண்டு வசனங்களைப் பேசிவிட்டுச் செல்லும் காட்சிப் பொருளாக வந்து போவதில் விருப்பமில்லை. குறைவான நேரமே திரையில் தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் பதியும் வகையில் துருதுரு கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. உதாரணமாக ஜோதிகா, ஜெனிலியாவைப் போன்று நடித்து பெயரெடுக்க விரும்புகிறேன்," என்கிறார் ஷிரின்.

