சினிமாத்துறை முடங்கியிருப்பதால் திரைக்கலைஞர்கள் வீட்டில் ஓய்வாக உள்ளனர். குடும்பத்தாருடன் பொழுதைப் போக்குகின்றனர்.
ஆனால் நடிகர் தனுசின் சகோதரி கார்த்திகா குடும்பத்தாரைப் பார்க்க முடியவில்லை என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஒரே நகரத்தில் இருந்தாலும் தனது சகோதரர்கள் பெற்றோரைப் பார்க்க முடியவில்லை என்று காணொளிப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"என் வாழ்வில் இதுவரை குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். ஆனால் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரே நகரத்தில் இருந்தும் கூட நாங்கள் பிரிந்திருக்கிறோம்.
"இதற்கு முன்பு உங்களை இப்படிப் பிரிந்து தவித்ததில்லை. தூய அன்பு மற்றும் குடும்பத்தோடு செலவிடும் நேரம் ஆகியவற்றுக்கு இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. உங்களை மிகவும் நேசிக்கிறேன்," என்று சமூக வலைத்தளத்தில் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்க தனுஷ் மிகப்பெரிய பங்காற்றுவார் என இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி' படத்துக்கு இவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் தனுஷை வெகுவாகப் பாராட்டி உள்ளார் ஷான்.
"ஆண்டுதோறும் ஆயிரம் படங்கள் வெளியீடு காணலாம். ஆனால் அவை யாவும் 'பவர் பாண்டி' போல் சிறந்த படமாக முடியாது. இயக்குநர் தனுஷ், தமிழ்ச் சினிமாவின் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க மிகப்பெரிய பங்காற்றுவார். ஒரு மறுமலர்ச்சி மெதுவாக நடக்கும். ஆனால் நிச்சயமாக நடக்கும்," என்று தெரிவித்துள்ளார் ஷான்.

