திரைப்படத் துறையினர் குறித்து வெளியாகும் புகைப்படங்களும் காணொளிப் பதிவுகளும் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவது வழக்கம். அதேசமயம் இவற்றால் சில சர்ச்சைகளும் வெடிப்பதுண்டு.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு புகைப்படம் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட அந்தப் படத்தில் இருப்பது தாம் அல்ல என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இவர் தீவிரமாக இயங்கி வந்த நிலையில் சில விஷமிகள் இவரது ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கி உள்ளனர். இதையடுத்து அதில் இடம்பெற்றிருந்த அனுபமாவின் படத்தை கணினி தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்துள்ளனர். இதையடுத்து அந்தப் படம் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
அப்படத்தைக் கண்ட அனுபமா பதறிப்போனார். உடனடியாக இதுகுறித்து காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் தெரிவித்துள்ளபோதிலும் நடந்தவற்றை அவரால் ஜீரணிக்க முடியவில்லையாம்.
இது குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சம்பந்தப்பட்ட விஷமிகளை அருவெறுப்பானவர்கள் என காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
"இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களையெல்லாம் செய்வதற்கு நேரம் இருக்கும் அருவருப்பான நபர்
களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்கள் வீட்டில் தாய், சகோதரிகள் இல்லையா? உங்களுடைய மூளையை இதுபோன்ற முட்டாள்தனங்களுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்துங்கள். இதை உங்களுக்குத் தெளிவுபடுத்தவே இந்தப் பதிவு," என அனுபமா குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் தனுசுடன் 'கொடி' படத்தில் நடித்துள்ள அவர், தற்போது கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'தள்ளிப் போகாதே' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் எப்போதும் பரபரப்பாக இருப்பார் சிம்பு. இந்நிலையில் அவர் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது 'மாநாடு' படத்தில் நடித்து வருபவர் படப்பிடிப்பு ரத்தானதால் வீட்டில் உள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள் அனைவருடனும் தொலைபேசி வழி தொடர்புகொண்டு பேசி வருகிறாராம்.
அந்த வகையில் மகத் உள்ளிட்ட நண்பர்களுடன் அவர் பேசும் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
சிம்பு எந்த சமூக வலைத்தளத்திலும் உறுப்பினராக இல்லை. எனவே அவரைப் பற்றி அண்மைக் காலமாகப் புகைப்படங்களோ காணொளிப் பதிவுகளோ அதிகம் வெளியாகவில்லை. மற்ற நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கும்போது சிம்பு மட்டும் ஒதுங்கி நிற்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சிம்பு தன் வீட்டில் சமையல் செய்யும் புகைப்படம் ஒன்று அவரது நண்பர் மூலம் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகத்தினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதை அவரது ரசிகர்கள் தற்போது பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே 'மாநாடு' படத்தை அடுத்து சுதா கொங்கராவின் படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம்.
அண்மையில் அனைத்துலக உடன்பிறப்புகள் தினம் அனுசரிக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு உத்தரவால் இந்தாண்டு அத்தினம் களைகட்டவில்லை.
இந்நிலையில் நடிகை ஷ்ருதிஹாசன் தனது தங்கை அக்ஷராவுடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அக்ஷரா அற்புதமான சகோதரி என்றும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஷ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.