விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து வெளியாகிறது 'காடன்'. மனிதர்கள் சுயநலத்துக்காக காட்டு வளங்களை அழிப்பது எவ்வளவு மோசமான செயல் என்பதை விவரிக்கும் படைப்பாக இது உருவாகிறதாம். பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் விவரித்துள்ளார் விஷ்ணு விஷால்.
கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் தான் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளானதைக் குறிப்பிட்டு மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி பட்ட சிரமங்களையும் விவரித்திருந்தார். இந்நிலையில் பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இவருக்குமான காதல்தான் விஷ்ணு விஷாலின் மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் அமைதி காத்து வந்த விஷ்ணு தற்போது வாய்திறந்திருக்கிறார். இனி அவரது பேட்டியைக் காண்போம்:
"காதல் வயப்பட்டு உற்சாகத்துடன் திரிய நான் ஒன்றும் 18 வயது இளைஞன் அல்ல. காதல் ஒருமுறைதான் வரும். என்னைப் பொருத்தவரை காதல் என்பது திருமணம் மற்றும் அதற்குப் பிறகான வாழ்க்கை. என் வாழ்க்கையில் அது முடிந்துவிட்டது. 11 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வாழ்க்கையை அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது.
"நான் ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக இருந்தேன் என்றும் பிறகு நடிகை அமலா பாலுடன் நெருங்கிப் பழகினேன் என்றும் ஆளாளுக்கு செய்தி வெளியிடுகிறார்கள். அவையெல்லாம் உண்மையல்ல. அதற்காக இவையெல்லாம் வதந்திகள் என்று நிரூபிக்க எனது விவாகரத்துக்கான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்த இயலாது. அது என் தனிப்பட்ட விஷயம். அதுகுறித்து பேச விரும்பவில்லை.
"ஜுவாலா கட்டாவும் நானும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பதை நான் வரவேற்கிறேன். நாட்களின் போக்கில் உங்களுடைய மகிழ்ச்சியை, துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள யாரேனும் ஒருவர் தேவை. விவாகரத்துக்குப் பிறகு ஜுவாலாவைச் சந்தித்தேன். அவருடன் அதிக பொழுதைச் செலவிட்டேன்.
"அவர் நேர்மறையான எண்ணம் கொண்டவர். அது எனக்குப் பிடித்திருக்கிறது. என்னைப் போலவே அவரும் தன் வாழ்க்கையில் பிரிவைச் சந்தித்தவர். இருவரும் கலந்து பேசினோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். இப்போது எல்லாம் நல்லவிதமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
"எனக்கு இப்போது 35 வயதாகிறது. வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து நன்கு முதிர்ச்சி அடைந்துள்ளேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
"வாழ்க்கையில் தவறு செய்யாதவர்கள் இருக்க முடியாது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. மணவாழ்க்கையில் இருந்து பிரிந்து நிற்பது என்னை நிச்சயமாகப் பாதித்துள்ளது. என் மனதில் இருப்பதை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.
"தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், நட்பு என்று அனைத்தும் பாதிக்கப்படும்போது நிச்சயமாக மன அழுத்தம் ஏற்படும். இது சாதாரணமாக கடந்துபோகும் விஷயமல்ல. 28 வயது வரை மதுவைத் தொட்டுக்கூடப் பார்க்காதவன் திடீரென மதுப்பழக்கத்திற்கு ஆளானேன். அதன்பிறகு கிட்டத்தட்ட மதுவுக்கு அடிமையாகும் அளவுக்குச் சென்றேன். பெற்றோரை நல்லவிதமாகக் கவனித்துக் கொள்வதில் தோற்றுவிட்டதாகத் தோன்றியது.
"அந்தக் குற்ற உணர்வில் இருந்து விடுபட மீண்டும் நம்பிக்கையுடன் உழைக்கத் தொடங்கினேன். கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய உடற்கட்டைப் பெற்றேன். இது மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். 'காடன்' நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் விஷ்ணு விஷால்.

