ஊரடங்கு வேளையில் திரைக்கலைஞர்கள் வீட்டில் முடங்கியிருப்பதால் தங்களுக்குப் போரடிப்பதாகப் புலம்பி வருகின்றனர்.
இதையடுத்து வீட்டில் தாங்கள் செய்யும் வேலைகள், பொழுதுபோவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல நடிகைகள் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள், காணொளிகளையும் வெளியிடுகின்றனர். இதனால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக உள்ளது. சில இளம் நடிகைகள் ஊரடங்கை எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் படப்பிடிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த தினங்களில் என்ன செய்யவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு விடுவாராம். இதனால் கொவிட்-19 பீதியால் கிடைத்திருக்கும் இந்த ஓய்வைத் தமக்குப் பயனுள்ள வகையில் செலவிட முடிவதாகச் சொல்கிறார்.
"பொதுவாக படப்பிடிப்பு இல்லாதபோது காலையில் 8 மணிக்குதான் எழுவேன். அதன்பிறகு உடற்பயிற்சியும் தியானமும் செய்வேன்.
"இப்போது ஓய்வு அதிகமாக இருப்பதால் தினமும் ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் எனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். படப்பிடிப்பின்போது வெளியே கிடைக்கும் உணவைச் சாப்பிடுவதில் விருப்பமில்லை என்றாலும் வேறு வழியில்லை. இப்போது தினமும் வீட்டில் நானே சமைத்துச் சாப்பிடுகிறேன்," என்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
இளம் நடிகை வர்ஷா பொல்லமாவுக்கு இசையில் கொள்ளைப் பிரியமாம். சிறுவயதில் கித்தார் வாசிக்க பயிற்சி பெற்றாராம்.
தற்போது வீட்டில் இருந்தபடி தன் தாயாருக்கு முடிந்த உதவிகளைச் செய்வதும், அவருடன் பல விஷயங்கள் குறித்துப் பேசுவதும் மிகுந்த உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார்.
"சிறுவயதில் எனக்காக வீட்டில் ஒரு கித்தார் வாங்கிக் கொடுத்தனர். அப்போது நிறைய நேரம் வாசித்துப் பயிற்சி பெறுவேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீண்ட ஓய்வு கிடைத்திருப்பதால் கித்தாரை தூசி தட்டி எடுத்து மீண்டும் வாசிக்கத் துவங்கி உள்ளேன்.
"படப்பிடிப்பின்போது அம்மாவின் சமையலை ருசி பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. வெளியே கிடைக்கும் எந்த உணவும் அம்மாவின் கைப்பக்குவத்துக்கு இணையாகாது. இப்போது தினமும் அவர் கையால் சமைத்துக் கொடுக்கும் விதவிதமான உணவுகளை ஒரு பிடி பிடித்து வருகிறேன்," என்று உற்சாகத்துடன் பேசுகிறார் வர்ஷா பொல்லமா.
கொவிட்-19 பிரச்சினைக்கு முன்பே இளம் நாயகி ஐஸ்வர்யா மேனன் வீட்டுக்குப் புது வரவாக ஒரு நாய்க்குட்டி வந்து சேர்ந்துள்ளது. அதற்கு 'காபி' என்று பெயர் வைத்துள்ளனர்.
"'காபி' வீட்டிற்கு வந்து 6 மாதங்களாகின்றன. அதற்குள் எல்லாருடனும் நன்கு பழகத் தொடங்கி விட்டது. பெரும்பாலான நேரத்தை அதனோடுதான் செலவிடுகிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
இளம் நாயகி மேகா ஆகாஷைப் பொறுத்தவரை வீட்டிலிருப்பது கொஞ்சம்கூட போரடிக்கவில்லையாம். வீட்டைச் சுத்தப்படுத்துவதற்குதான் அதிக நேரத்தைச் செலவிடுகிறாராம்.
அவ்வப்போது புத்தகங்கள் படிப்பது., யோகாசனம் செய்வது என்றும் பொழுது போகிறது.
"உண்மையைச் சொல்லவேண்டுமானால் வீட்டிலிருப்பதே இரட்டிப்பு உற்சாகத்தை அளிக்கிறது. வேலை காரணமாக எப்போதும் பயணத்திலேயே பொழுது போய்விடும். அதனால் இந்தக் கட்டாய ஓய்வு எனக்குப் போரடிக்கவில்லை.
"ஓவியம் தீட்டுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். இணையத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால் பல திரைப்படங்களை திரையரங்குக்குச் செல்லாமலேயே பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதுதவிர, பலவிதமான கேக்குகளைச் செய்து வீட்டில் இருப்பவர்களுக்குக் கொடுத்து வருகிறேன். வேறு வழியில்லாமல் அவர்கள் அதைச் சாப்பிடுவதைப் பார்க்க பாவமாக உள்ளது," என்று சிரிக்கிறார் நேகா ஆகாஷ்.

