பெரிய வெற்றிப் படங்களைக் கொடுக்காவிட்டாலும் தொடர்ந்து தமிழில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'காதலைத் தேடி நித்யானந்தா' படத்தில் இவர்தான் நாயகி.
முதன்முறையாக ஜி.வி. பிரகாசுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். யோகிபாபு, ஆனந்தராஜ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிப்பாராம் சஞ்சிதா. படத்தின் கதையை சொன்னபோதே இதுகுறித்தும் விவரித்துள்ளார் இயக்குநர் ஆதிக். அவருடனும் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுடனும் நீண்ட நேரம் தமது தோற்றம் மற்றும் கதாபாத்திரத்துக்கான ஆடைகள் குறித்தும் சஞ்சிதா விவாதித்துள்ளார்.
"நான் அணியும் மூக்குத்தி, வளையல்கள் தொடங்கி காலணிகள், புடவைகள் என அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். இதுகுறித்து பல மணி நேரம் விவாதித்தோம். மேலும் பல கோணங்களில், பல உடைகளில் என்னைப் புகைப்படம் எடுத்தனர். அவற்றைப் பார்த்து திருப்தி ஏற்பட்ட பிறகே படப்பிடிப்புக்கான நாளை முடிவு செய்தார் ஆதிக்.
"படப்பிடிப்பு தொடங்கியதும் தான் அவரிடம் ஒளிந்துகொண்டிருந்த இன்னொரு இயக்குநரை என்னால் காண முடிந்தது. அதற்கு முன்பு பரபரப்பாக இருந்தவரிடம் தலைகீழ் மாற்றம். என்னதான் முன்பே கதையைச் சொல்லியிருந்தாலும் வசனங்கள் என்று எதையும் என்னிடம் காட்டவோ, சொல்லிக் கொடுக்கவோ இல்லை.
"படப்பிடிப்புக்கு முந்தைய நாள் என்னைச் சந்தித்துப் பேசியவர், எதற்கும் கவலைப்பட வேண்டாம், படப்பிடிப்பு தளத்தில் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வோம் என்றார். எனக்கான காட்சி மறுநாள் படம் பிடிக்கப்பட்டது.
"அப்போது என்னிடம் வந்த ஆதிக் இப்படியொரு சூழ்நிலையை எதிர்கொண்டால் நீங்கள் என்ன பேசியிருப்பீர்கள்? இப்போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதையே பேசுங்கள் என்றார். இப்படியொரு அணுகுமுறையை நான் இதுவரை எதிர்கொண்டதே இல்லை. எனினும் சில நிமிடங்களில் நானும் இயல்புநிலைக்கு வந்து சொந்தமாக சில வசனங்களைப் பேசினேன்.
"இந்த விஷயத்தில் உதவி இயக்குநர்களின் உழைப்பும் இருந்தது. அவர்கள் சில வசனங்களைச் சொல்லிக்கொடுத்தனர். அண்மைய சில ஆண்டுகளில் தமிழ் பேசுவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் என்னால் வார்த்தைகளைக் கச்சிதமாக உச்சரிக்க முடிந்தது. மொத்தத்தில் இந்தப் படப்பிடிப்பு வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிட்டது," என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.
யோகிபாபு குறித்துப் பேசினால் அவரது முகம் முழுக்க புன்னகை படர்கிறது. இரண்டு நாட்கள்தான் அவருடன் படப்பிடிப்பில் பங்கேற்றாராம். அதற்குள் அவரது தீவிர ரசிகையாகி விட்டதாக சொல்கிறார். யோகிபாபுவின் ஒவ்வோர் அசைவும் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எப்படியும் சிரிப்பை வரவழைத்துவிடும் என்கிறார்.
"நான் முன்பே அவரது ரசிகைதான். படப்பிடிப்பின்போது அவரைச் சந்திக்க மிகவும் ஆவலாகக் காத்திருந்தேன். ஒவ்வொரு காட்சியையும் அவர் மெருகேற்றும் விதம் அலாதியானது. படப்பிடிப்பு நடந்த இரண்டு நாட்களும் உற்சாகமாக இருந்தது.
"சில காட்சிகளில் அவர் திடீரென நம்மை ஒரு மாதிரியாகப் பார்ப்பதும் சூழ்நிலைக்கேற்ப ஒன்றிரண்டு வார்த்தைகளில் நக்கலடிப்பதும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும். ஆனால், அந்தச் சமயத்தில் சிரிக்காதவர்களே இருக்கமுடியாது," என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

